

மும்பை 26/11 தீவிரவாதத் தாக்குதலின் போது சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற மும்பை போலீஸ் நாய் சீசர் மரணம் அடைந்தது.
மும்பையில் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலின் போது தீவிரவாதிகளைப் பிடிப்பதற்கு போலீஸாருக்கு சிறப்பாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற போலீஸ் நாய் சீசர்.
சீசரின் ஒய்வுக்குப் பிறகு அதனை விலங்குப் பிரியரான ஃபைசா ஷா என்பவர் வாங்கியுள்ளார். சீசருடன் சேர்ந்து அதன் நண்பர்களான மாக்ஸ், சுல்தான், டைகர் உள்ளிட்ட நாய்களையும் ஷா வாங்கியிருக்கிறார்.
சீசரின் நண்பர்களான மாக்ஸ், டைகர், சுல்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறக்க தனது நண்பர்களின் பிரிவினால் மன அழுத்தத்திலிருந்த சீசர் வியாழக்கிழமை தனது பண்ணை வீட்டில் உயிரிழந்துள்ளது.
சீசர் இறப்பு குறித்து ஃபைசா ஷா கூறும்போது, "சீசருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்தது. இந்த நிலையில்தான் அதன் நண்பனான டைகரும் உயிரிழந்தது. டைகர் உயிரிழந்த சோகத்திலிருந்த சீசருக்கு உடல் நிலை மிகவும் மோசமடைந்து விட்டது. சீசர் அனைவரிடமும் நட்போடு பழகும். சீசருடன் இருந்த நாட்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
புனேவில் பயிற்சி பெற்ற சீசர்
சீசருக்கு மூன்று வயதாக இருக்குபோது மும்பை காவல் துறையில் இணைந்துள்ளது. புனேவிலுள்ள பயிற்சியகத்தில் ஆறுமாதம் பயிற்சி பெற்றது. மும்பையில் மோப்ப நாயாக பணியாற்றிய சீசர் 2013ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றது.
சீசரின் இறப்பு குறித்து வருத்தம் தெரிவித்த மும்பை போலீஸ் கமிஷ்னர் டி.பசல்கிகர், "தைரியமாக, கடமை தவறாது பணியாற்றிய சீசரின் நினைவுகள் மறக்கமுடியாதவை" என்று கூறினார்.