Last Updated : 27 Oct, 2016 09:50 AM

 

Published : 27 Oct 2016 09:50 AM
Last Updated : 27 Oct 2016 09:50 AM

மருத்துவர்கள் அலட்சியப் போக்கால் அலிகர் பல்கலை. தமிழ் பேராசிரியர் மரணம்

‘தி இந்து’ செய்தியாளரின் நேரடி அனுபவம்

அலிகர் மருத்துவர்கள் அலட்சியப்போக் கால் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழக தமிழ் பேராசிரியர் து.மூர்த்தி (64) இறந்தது அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த இருநாட்களும் அவருக்கு உதவி யாக இருந்த ‘தி இந்து’ செய்தி யாளரின் நேரடி அனுபவம் இது.

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் நவீன இந்திய மொழிகள் துறையின் தலைவர் து.மூர்த்தி. அங்கு தமிழ் போதிக் கும் பணிக்காக கடந்த 1988-ல் நியமிக்கப்பட்டார். இவருக்கு சில ஆண்டுகளாக அவ்வப்போது வயிற்று வலி இருந்து வந்தது. இது கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகமானதால் மூர்த்தி அவரது பல்கலை.யில் அமைந்துள்ள ஜேஎன்எம்சி (ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி) மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு மலம் வெளியேறாமல் வயிறு அதிகமாக வீங்கி இருந்தது. ஊடுகதிர் சோதனைக்குப் பிறகு அவரது குடலில் அடைப்பு இருப்பதாக கூறி, அன்று மாலை சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மறுநாள் காலை 9 மணிக்கு மூர்த்தியை பரிசோதித்த மருத்து வர்கள் அவருக்குச் சீறுநீர் வெளியேறுவதில் பிரச்சினை இருப்பதாக கூறி சிறப்பு மருத் துவர்கள் பரிசோதனைக்கு பரிந் துரைத்தனர். இதில் இருந்துதான் மருத்துவர்களின் அலட்சியப் போக்கு தொடங்கியது.

மூர்த்தியின் உடல்நிலை கருதி உடனே வரவேண்டிய ஜேஎன்எம்சியின் சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் வரவில்லை. அவருடன் இருந்த செய்தியாளர் உட்பட சில தமிழர்களின் தனிப் பட்ட முயற்சியால் 2 மணி நேரத் திற்குப் பிறகு டாக்டர் காம்ரான் மற்றும் குழுவினர் அழைத்து வரப் பட்டனர். மூர்த்தியை சோதித்த காம்ரான் குழுவினர் அவருக்குச் சிறுநீரகம் பாதிக்கத் தொடங்கி விட்டதாகவும், உடனே அவரை டெல்லி மருத்துவமனைக்கு அனுப்பவேண்டும் எனவும் அறி வுறுத்தினர். ஆனால் இதை பரிந் துரைப்பது யார் என்ற பிரச்சினை சிறுநீரக மருத்துவர் குழு மற்றும் அறுவை சிகிச்சை செய்த பேராசிரியர் டாக்டர் முகம்மது அஸ்லம் இடையே சுமார் 4 மணி நேரம் நீடித்தது.

இதற்கும் அலிகர் தமிழர் களின் சொந்த முயற்சியால் மாலை 4 மணிக்கு அறுவை சிகிச்சை மருத்துவரிடம் பரிந்துரை பெறப்பட்டது. அதன் பிறகு ஆம்புலன்ஸ் மற்றும் அதனுடன் செல்லவேண்டிய மருத்துவர் உதவிக்கானப் பிரச்சினை தொடங்கியது. இது மாலை 7 மணிக்கு முடிவுக்கு வந்தபோது மூர்த்திக்கு சிறுநீர் வெளியேறாமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

இரண்டரை மணிநேர பயண தூரத்தில் உள்ள டெல்லிக்கு மூர்த்தி உரிய நேரத்தில் அனுப்பப் பட்டிருந்தால் அவர் பிழைத் திருக்கக் கூடும் என சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து ஒரு மருத்துவர் உட்பட மூன்று பேராசிரியர்கள் கொண்ட விசார ணைக் குழு துணைவேந்தரால் அமைக்கப்பட்டு, நவம்பர் 5-க்குள் அறிக்கை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கதை, கட்டுரை மற்றும் கவிதைகள் எழுதும் திறமை படைத்தவர் மூர்த்தி. இவரது ஆய்வுக் கட்டுரைகள் பல வெளியாகி உள்ளன. பெரியார் மற்றும் மார்க்சிஸ சிந்தனை கொண்ட இவரது பேச்சை கேட்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவர்.

போலந்து நாட்டின் வார்ஸா பல்கலை.யிலும் 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அலிகர் பல்கலை.க்கு முன் தஞ்சை தமிழ் பல்கலை.யிலும் பணியாற்றி உள்ளார். பல்வேறு தமிழ் பத்திரிகைகளில் சமூகம் மற்றும் அரசியல் கட்டுரைகள் எழுதியுள்ள மூர்த்தி, தினப்புரட்சி நாளேட்டின் கவுரவ ஆசிரியராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்.

து.மூர்த்தியின் உடல் விமானம் மூலம் சென்னைக்குச் கொண்டு செல்லப்பட்டு அவரது சொந்த ஊரான வேலூரில் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டது. பிறகு மூர்த்தியின் விருப்பத்திற்கு இணங்க, அவரது உடல் மூத்த சகோதரரர் அரங்கநாதனால் சி.எம்.சி. மருத்துவமனைக்கு நேற்று தானமாக அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x