

உத்தரப்பிரதேசத்தின் பதுவானில் நிகழ்ந்த பாலியல் பலாத்காரம், கொலை சம்பவம் குறித்த போலீஸ் விசாரணையை கண்காணிக்க இருப்பதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மாநில காவல்துறை தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.பலாத்காரம் சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைவில் நீதிமன்ற கூண்டில் ஏற்ற மாநில அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், இதுவரை விசாரணையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான அறிக்கையை அளிக்க வேண்டும் என்று மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்துக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுநல மனு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பப்பு யாதவிடம் தீவிர விசாரணை
இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பப்பு யாதவை சிறப்பு விசாரணைக் குழுவினர் நேற்று தங்கள் காவலில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பப்பு யாதவை புதன்கிழமை காலை 10 மணி முதல் இரவு 7 மணி சிறப்பு விசாரணைக் குழுவினர் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க கூடுதல் மாவட்ட நீதிபதி அனில் குமார் அனுமதியளித்திருந்தார்.