

தாத்ரி கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று சந்தேக்கிப்பட்டு கைது செய்யப்பட்ட 18 பேரில் ஒருவரான ரவி சிசோடியா டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மரணமடைந்தார்.
ரவி சிசோடியாவின் மரணம் குறித்து போலீஸார் தரப்பில், "ரவி சிசோடியா திங்கட்கிழமை சுவாச கோளாறு மற்றும் அதி தீவிர காய்ச்சல் காரணமாக நொய்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை ரவி சிசோடியா மரணம் அடைந்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரவி சிசோடியாவின் மரணம் குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளதை அவரது உறவினர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். போலீஸார்தான் ரவி சிசோடியாவின் மரணத்துக்கு காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தாத்ரி கிராமத்தின் பாஜக கட்சியின் உள்ளூர் தலைவரான சன்ஜய் ராணா 'தி இந்து' ஆங்கில செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "ரவி சிசோடா காவல் நிலையத்தில்தான் மரணம் அடைந்துள்ளார். அவரது மரணம் குறித்து போலீஸார் கூறுவதில் உண்மை இல்லை. எங்களுக்கு நியாயம் வேண்டும்" என்றார்.
முன்னதாக சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தர பிரதேசம் மாநிலம் தாத்திரி கிரமத்தில் முகமது அக்லாக் என்பவர் தனது வீட்டில் மாட்டுக் கறி வைத்திருந்தாதாக கூறி அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் அதே கிராமத்தை சேர்ந்த 18 பேரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரன ரவி சிசோடியா மரணம் அடைந்துள்ளார்.