

பாகிஸ்தான் வசமிருக்கும் இந்திய வீரரை மீட்டுக் கொண்டு வர சில நாட்கள் பிடிக்கும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தின் 37-வது ஆர்ஆர் படையை சேர்ந்த வீரர் சவான் கடந்த 30-ம் தேதி கவனக்குறைவாக கட்டுப்பாட்டு கோட்டை கடந்து பாகிஸ்தான் சென்றுவிட்டார். அவரை அந்நாட்டு ராணுவம் கைது செய்து பிடித்து வைத்திருப்பதாக இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமையகத்திடம் ஹாட்லைன் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானில் சிக்கி இருக்கும் ராணுவ வீரரை மீட்பது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய எல்லைப் பகுதியை அவர் கடந்து சென்றுவிட்டார். பத்திரமாக மீட்பதற்கான பணிகளை ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனரகம் மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்போது இருபுறமும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அவரை மீட்டு கொண்டு வர சில நாட்கள் பிடிக்கும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலுக்கும், கவனக்குறைவாக பாகிஸ்தான் எல்லையை கடந்த சென்ற விவகாரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் எல்லைக்குள் சவான் வழித்தவறி சென்ற விவரம் அறிந்ததும், அவரது பாட்டி அதிர்ச்சியில் உயிரிழந்தார். இதையடுத்து வெள்ளிக்கிழமை சவானின் குடும்பத்தை சந்தித்து பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.