Last Updated : 20 Jun, 2014 10:17 AM

 

Published : 20 Jun 2014 10:17 AM
Last Updated : 20 Jun 2014 10:17 AM

பிஹார் மாநிலங்களவை இடைத்தேர்தல் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்கள் வெற்றி: 22 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களிப்பு

பிஹார் மாநிலங்களவை இடைத் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்கள் இருவரும் வெற்றி பெற்றனர்.

ஐக்கிய ஜனதா தளம் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் குலாம் ரசூல் பால்யாவி, கட்சியின் மூத்த தலைவர் நிதிஷ்குமாரின் முன்னாள் ஆலோசகரான பவண்குமார் வர்மா ஆகியோர் போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து ஐக்கிய ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட சபீர் அலி, ரியல் எஸ்டேட் அதிபர் அனில் சர்மா ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் இரு வேட்பாளர்கள் 15 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றனர்.

கட்சி மாறி வாக்களிப்பு

243 உறுப்பினர்கள் கொண்ட பிஹார் சட்டமன்றத்தில் 11 உறுப்பினர்களின் இடங்கள் காலியாக உள்ளன. ஐக்கிய ஜனதா தளத்துக்கு 117, பாஜகவுக்கு 84 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களுக்கு லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்- 21, காங்கிரஸ்- 4, இரு சுயேச்சைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆதரவு அளித்திருந்தனர். அதிருப்தி வேட்பாளர்களுக்கு பாஜக ஆதரவு அளித்தது. தேர்தலில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களுக்கு 122 வாக்குகளும் அதிருப்தி வேட்பாளர்களுக்கு 107 வாக்குகளும் கிடைத்தன. அதன்படி ஐக்கிய ஜனதா தளத்தின் 18 எம்.எல்.ஏ.க்கள், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸை சேர்ந்த தலா இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி அதிருப்தி வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளதாகக் கூறப் படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் ஐக்கிய ஜனதா தள பொதுச் செயலாளரான கே.சி.தியாகி கூறியபோது, ‘பிஹார் அரசியல் வரலாற்றில் இதுபோல் பணம் வாங்கி கொண்டு எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தது கிடையாது. சுயேச்சைகளாகவும் மாநிலங்களவைக்கு யாரும் போட்டியிட்டது இல்லை. பாரதிய ஜனதாவின் மறைமுக ஆதரவு இன்றி இது நடந்திருக்காது. கட்சி மாறி வாக்களித்த ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

பாஜக தேசிய துணைத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சி.பி.தாக்குர் தி இந்துவிடம் கூறியபோது, ‘தேர்தலில் பணம் பெற்றுக் கொண்டு வாக்களித்ததாக தெரியவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு பின் ஐக்கிய ஜனதா தளத்தில் பல பிரச்சினைகள் எழுந்தன. அதன் வெளிப்பாடாகத்தான் கட்சி மாறி வாக்குகள் விழுந்துள்ளன’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x