

‘‘எந்த சவாலுக்கும் சரியான பதிலடி கொடுக்கும் வகையில் விமானப் படை வீரர்கள் தயாராக இருக்கின் றனர்’’ என்று விமானப் படை தளபதி அரூப் ரஹா நேற்று உறுதியாகத் தெரிவித்தார்.
பதான்கோட், உரி தாக்குதல் களுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது தாக்கு தல் நடத்தியது இந்திய ராணுவம். அதன்பின், எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்ற னர். மேலும், இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலை யில், இந்திய விமானப் படை தலைமை மார்ஷல் அரூப் ரஹா, விமானப் படையின் அதிகாரப்பூர்வ முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
விமானப் படை வீரர்கள் தற்காலத்துக்கு ஏற்ற அதிநவீன ஆயுதங்களை கையாண்டு வரு கின்றனர். அத்துடன், இந்திய வான்வெளிப் பகுதியை இடை விடாமல் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எந்த சவாலுக்கும் சரியான பதிலடி கொடுக்கும் வகையில் விமானப் படை வீரர்கள் தயாராக இருக்கின்றனர். எந்த அச்சுறுத்தல் நேர்ந்தாலும் உடனடி யாக பதிலடி கொடுக்கப்படும். அதற்கேற்ப நாங்கள் முழு அளவில் தயாராகி இருக்கிறோம்.
இவ்வாறு தலைமை மார்ஷல் அரூப் ரஹா கூறியுள்ளார்.
இந்திய விமானப் படை கடந்த 1932-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. அதன் 84-வது விமானப் படை தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாரப் பூர்வ முகநூல் பக்கம் அறிமுகப் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாகச நிகழ்ச்சி
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில், 84-வது விமானப் படை தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அதிநவீன விமானங்களில் வீரர்கள் சாகசங்கள் நிகழ்த்திக் காட்டினர். நிகழ்ச்சியில் விமானப் படை தலைமை மார்ஷல் அரூப் ரஹா கூறும்போது, ‘‘உள்நாட்டிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானங்களில் முதல் முறையாக வீரர்கள் இங்கு சாகசங்கள் நிகழ்த்தி காட்டி உள்ளனர். எந்த தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க விமானப் படை தயாராகவே இருக்கிறது’’ என்றார்.
விமானப் படை தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உட்பட முக்கிய பிரமுகர்கள் வீரர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.