

காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007, பிப்ரவரி 5-ம் தேதி வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.என்.கான்வில்கர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அப்போது நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்த மனுக்களை விசாரிப்பதற்கான முகாந்திரம் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளதா என விவாதிக்கப்பட்டது.
இதுதொடர்பான வாதங்கள் கடந்த 19-ம் தேதி முடிவடைந்த நிலையில், இந்த மனுக்களை விசாரிப்பதற்கான முகாந்திரம் குறித்த தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
அத்துடன் அனைத்து தரப்பின ரும் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து அண்மையில் தமிழகம் உட்பட 4 மாநிலங்கள் சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அரசு சார்பிலும், நேற்று 17 பக்க எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது. எனவே காவிரி விவகாரத்தில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பே இறுதியானது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசமைப்பு சட்டப்படி தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் மேல்முறையீடு செய்ய முடியாது. இதனை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கும் முகாந்திரம் இல்லை. காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை நாடாளுமன்றம் மூல மாகவே தீர்க்கப்பட வேண்டும் என மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீட்டு சட்டம் வலியுறுத்து கிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.