Published : 23 Aug 2022 04:59 AM
Last Updated : 23 Aug 2022 04:59 AM

ஆம் ஆத்மியை உடைக்க பேரம்? - டெல்லி துணை முதல்வர் குற்றச்சாட்டும், பாஜக எதிர்வினையும்

மணிஷ் சிசோடியா

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவில் வந்து சேர்ந்தால் அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என தம்மிடம் பேரம் பேசப்பட்டதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் துணை முதல்வராக பதவி வகிக்கும் மணிஷ் சிசோடியா, கல்வி, ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளை கவனித்து வருகிறார். டெல்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அதுபற்றி சிபிஐவிசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார்.

இதன்பேரில் மணிஷ் சிசோடியாவின் வீடு உட்பட 31 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சிசோடியா மற்றும் 3 அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரிக்கமுடிவு செய்துள்ளது. ஆனால் இந்த வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை என ஆம் ஆத்மி கட்சி கூறிவருகிறது.

இந்நிலையில் மணிஷ் சிசோடியா நேற்று தனது ட்விட்டர் பதிவில், “ஆம் ஆத்மியை இரண்டாக உடைத்துவிட்டு பாஜகவில் வந்து சேருங்கள், சிபிஐ, அமலாக்கத் துறையின் அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வருகிறோம் என பாஜகவிடம் இருந்து எனக்கு தகவல் வந்துள்ளது.

நான் ராஜபுத்திரன்

ஆனால் பாஜகவுக்கு எனது பதில் என்னவென்றால் நான் மகாராணா பிரதாப்பின் வழித்தோன்றல். நான்ஒரு ராஜபுத்திரன். நான் என்னையே கூட தியாகம் செய்வேன். ஆனால் சதிகாரர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு முன் தலைவணங்க மாட்டேன். என் மீதான வழக்குகள் பொய்யானவை. நீங்கள் உங்கள் விருப்பம் போல் செய்து கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பாஜகவைச் சேர்ந்த மனோஜ் திவாரி அளித்துள்ள பதிலில், “சிசோடியா தன்னை மகாராணா பிரதாப்புடன் ஒப்பிட்டுக் கொள்வது வெட்கக்கேடானது. மகாராணா பிரதாப், மக்களை குடிக்கச் செய்யவில்லை. நீங்கள் ஒவ்வொரு மூலையிலும் மதுபானம் விற்கிறீர்கள். பெண்களின் அழுகுரலை புறக்கணிக்கிறீர்கள். மகாராணா பிரதாப் பெண்களுக்காக ஆயுதம் எடுத்தவர். மணிஷ் சிசோடியா போன்ற ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதை பாஜக உறுதி செய்யும். ஊழல்வாதிகளுக்கு பாஜகவில் இடமில்லை” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x