

நிதிஷுக்கு எதிரான சகாபுதீன் தெரிவித்த கருத்து மற்றும் அதனால் எழுந்த மோதல் காரணமாக இரு லாலு பிரசாத் யாதவ் - நிதிஷ் குமார் இடையே பேச்சுவார்த்தை நின்றிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 10-ம் தேதி பாகல்பூர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான சகாபுதீன், "சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முதல்வரானவர் நிதிஷ்குமார்" என விமர்சனம் செய்தார்.
இதை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்ததலைவர்கள் சிலரும் ஆதரித்துப் பேச, இவர்களுடன் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் சொற்போர் தொடங்கினர். இதில், பிஹார் ஆளும்கூட்டணியின் மற்றொரு உறுப்பினரான காங்கிரஸும் நிதிஷுக்கு ஆதரவாகப் பேசியது.
லாலு – நிதிஷ்குமார் இடையே, நாள் தவறாமல் தொலைபேசி மூலமோ அல்லது நேரிலோ நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை இந்த விவகாரத்தால் நின்று போனது.
தற்போது, உச்ச நீதிமன்றத்தால் சகாபுதீனுக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் சிறை சென்ற பிறகும், இதேநிலை நீடிப்பதாகக் கூறப்படுகிறது.
நிதிஷுக்கு எதிராக சகாபுதீன் கூறிய கருத்தே இதற்கு காரணமாகி விட்டது. இது குறித்து சகாபுதீன், "அடுத்து வரவிருக்கும் தேர்தலில் எனது ஆதரவாளர்கள் நிதிஷுக்கு பாடம் புகட்டுவார்கள். இவர் தொடர்ந்து ஆட்சியில் அமர ஒரு உந்துதல் அவசியப்படுகிறது. இதை முன்பு அவருக்கு பாரதிய ஜனதா அளித்தது. தற்போது, அதை லாலுஜி அளித்து வருகிறார். எனவே லாலுஜியை போல் நிதிஷ் ஒரு மக்கள்தலைவர் அல்ல" என்று கூறியிருந்தார்.
சகாபுதீன் ஜாமீன் ரத்தானதற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் சிவானில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தினர். அப்போது, நிதிஷுக்கு எதிராககோஷங்களும் எழுப்பினர். இதற்கு சில நாட்களு்க்கு முன்,லாலுவின் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வீ யாதவ், மற்றொரு மகனும் மருத்துவத் துறை அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகிய இருவரும் நிதிஷுடன் கலந்து கொள்ளவிருந்த ஒரே மேடையில் கலந்து கொள்வதையும் தவிர்த்து இருந்தனர்.
இது குறித்து 'தி இந்து'விடம் லாலு கட்சி நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, "சகாபுதீன் ஒரு கிரிமினலாக இருப்பினும் முஸ்லிம் என்பதால் அவருக்கு ஆதரவளிக்க லாலுஜி விரும்புகிறார். தவறான விஷயங்களுக்கு சகாபுதீன் பிரபலமானவர் என்றாலும் அரசியல் காரணங்களுக்காக அவருக்கு ஆதரவளிக்க வேண்டியுள்ளது. சகாபுதீனுக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக கருத்து கூறுவதை தவிர்ப்பதற்காக, லாலுஜி தனது வெளிநிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டார். இதேநிலை தொடர்ந்தால் நிதிஷ் குமார் – பாஜக இடையிலான 17 ஆண்டு கால உறவு மீண்டும் மலரும் ஆபத்து இருப்பதை லாலுஜி ஏனோ லாலுஜிஉணரவில்லை" என்று தெரிவித்தனர்.
லாலு கட்சி நிர்வாகிகள் கூறுவதை ஆமோதிக்கும் வகையில் கடந்த 27 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், டெல்லியில் ஐஜத கட்சியின் மாநிலங்களவை தலைவரான சரத்யாதவை அவரது வீட்டில் சந்தித்து ஒரு மணி நேரம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது பற்றி கேட்டபோது இருதலைவர்களுமே "இது தனிப்பட்ட முறையிலானது, மரியாதை நிமித்தமானது” எனக் கூறி நழுவி விட்டனர். இதற்கும் சில தினங்கள் முன்பாக, ஜனசங்கம் (பாஜகவின் முந்தைய பெயர்) கட்சியின் மூத்ததலைவர் தீனதயாள் உபாத்யாயவின் நூற்றாண்டு விழாக்குழுவில் நிதிஷ் மற்றும் சரத்யாதவின் பெயர்கள் பிரதமரால் சேர்க்கப்பட்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. எதிர்க்கட்சிகளில் இந்த இருவர் பெயர் மட்டும் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.