

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய பெல்லட் குண்டு பாய்ந்து சிறுவன் பலியானதை தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக ஸ்ரீநகரில் ஏழு இடங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ நகரில் சஃபாகடல் நகரில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினருக்கும், ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய பெல்லட் குண்டு ஜுனைத் ஆக்கூன் (12) என்ற சிறுவனின் நெற்றி மற்றும் மார்பில் பாய்ந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜூனைத் அக்ஹோன் வெள்ளிக்கிழமை இரவு மரணம் அடைந்தார். இதனையடுத்து ஸ்ரீநகரில் ஏழு போலீஸ் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியிருப்பதவது, ”கலவரப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவே பதற்றம்மிக்க இடங்களான நௌஹட்டா, கன்யார், ரைனாவாரி, சஃபாகடல், மகராஜ் குனி, மைசுமா, பட்டமளூ போன்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது”என்று கூறப்பட்டுள்ளது.
ஜினைத் அக்ஹோன் மரணத்தைத் தொடர்ந்து காஷ்மீர் கலவரத்தில் பெல்லட் குண்டுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 84ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பின் தளபதியாக இருக்க புர்கான் வானி பாதுகாப்புப் படையினாரல் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் வெடித்த கலவரம் இன்னமும் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புர்ஹான் வானி என்கவுண்டருக்குப் பிறகு 92-வது நாளாக காஷ்மீரில் பதற்றம் நீடித்து வருகிறது, இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
ஊரடங்கைத் தொடர்ந்து வர்த்தக நிலையங்கள், கடைகள், பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.