

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு சனிக்கிழமை ஆலோசனை நடத்தியது.
சீதாராம் யெச்சூரி போன்ற கட்சியின் மூத்த தலைவர்கள் விலகுவதற்கு மீண்டும் முன் வந்ததாக செய்திகள் வெளியான நிலையில், கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி மற்றும் அரசியல் ரீதியாகவும் தேர்தலையொட்டியும் எடுத்த நிலை குறித்து மூத்த தலைவர்கள் விவாதித்தனர்.
பொலிட்பீரோவிலிருந்து யெச்சூரியும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் விலகுவதற்கு முன்வந்ததாக வெளி யான செய்திகளை உடனடியாக உறுதிப்படுத்த இயலவில்லை.
டெல்லியில் 89 உறுப்பினர் கொண்ட மத்திய குழுவின் இரு நாள் கூட்டம் சனிக்கிழமை தொடங்கியது. தேர்தலின்போது எடுத்த அரசியல் நிலை, பாஜக எதிர்ப்பு பிரசாரம் பற்றி காரசார விவாதம் நடந்தது.
இந்த கூட்டத்தில் முக்கிய கவனம் மேற்கு வங்கம் மீதே திரும்பியது.
கட்சித் தொண்டர்கள் மீதான வன்முறைகள், தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பது பற்றியும் எதிர்கால திட்டம் பற்றியும் விரிவாக விவாதம் நடந்தது.