Last Updated : 09 Oct, 2016 01:26 PM

 

Published : 09 Oct 2016 01:26 PM
Last Updated : 09 Oct 2016 01:26 PM

மகாராஷ்டிரா கோயில் பூசாரியை பங்கஜா முண்டே மிரட்டும் ஆடியோவால் சர்ச்சை

மகாராஷ்டிரா மாநில பாஜக அமைச்சர் பங்கஜா முண்டே. ஊரக வளர்ச்சி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கிறார். அரசு பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள், கடலை மிட்டாய் வாங்க ரூ.200 கோடிக்கு ஒப்பந்தம் அளித்ததில் ஊழல் நடந்ததாக பங்கஜா முண்டே மீது புகார் எழுந்தது. அதன்பின் லத்தூரில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பங்கஜா, அங்கு செல்பி எடுத்துக் கொண்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், கோயில் பூசாரியை பங்கஜா மிரட்டுவதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி உள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் பகவன்கட் மலைக்கோயில் பூசாரியிடம் அமைச்சர பங்கஜா முண்டே பேசியிருக்கிறார். அப்போது தசரா பண்டிகையை முன்னிட்டு கோயிலில் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான ஆடியோ நேற்று வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஆடியோவில், மகாராஷ்டிராவின் பார்லி பகுதியில் உள்ள நாம்தேவ் சாஸ்திரி மகராஜின் ஆதரவாளர்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என்றும் கிராமப்புற பகுதியில் சிறுதொழிலுக்கான நிதியில் தான் நினைப்பவர்களை விலைக்கு வாங்க முடியும் என்றும் பங்கஜா மிரட்டி உள்ளதாக தெரிகிறது.

மேலும் தசரா பண்டிகையை கண்டிப்பாக கொண்டாடியாக வேண்டும். அதில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது. எங்கள் ஆட்கள் சாதாரணமானவர்கள் அல்ல. பார்லி பகுதியை அடித்து நொறுக்குவார்கள். போலி வழக்கு பதிவு செய்து அங்குள்ளவர்களை வெளியேற்றி விடுவார்கள் என்று பங்கஜா முண்டே மிரட்டுவதாக அந்த ஆடியோவில் உள்ளது. இந்த ஆடியோவின் ஆதாரத்தன்மை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதுகுறித்து பங்கஜா முண்டே எந்த கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டதாக அவரது செயலாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஆடியோ வெளியானதால் அமைச்சர் பதவியில் இருந்து பங்கஜா முண்டேவை நீக்க வேண்டும் என்று மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்செய் முண்டே வலியுறுத்தி உள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x