அமெரிக்க தாக்குதல் முறையை பின்பற்றி பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் அழிப்பு?

அமெரிக்க தாக்குதல் முறையை பின்பற்றி  பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் அழிப்பு?
Updated on
2 min read

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக, பாதுகாப்பு அமைச்சகத்தில் மத்திய அரசு போர் அறை அமைத்து ரகசிய ஆலோசனை நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. இதில் முன்னாள் இராக் அதிபர் சதாம் உசேன், அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் ஆகியோரை பிடிக்க அமெரிக்கா பயன்படுத்திய தாக்குதல் முறையில் திட்டங்கள் தீட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்தில் போர் அறையில் புதன்கிழமை இரவு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், ராணுவ தலைமை தளபதி ஜெனரல் தல்பீர் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் மூவரும், இரவு 11 - 11.30 மணிக்கு இடையில் தனித்தனியாக சவுத் பிளாக்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வந்து சேர்ந்தனர். எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி அந்தக் கட்டிடத்தில் நுழைந்த இவர்கள் தாக்குதல் முடிந்த பின் விடியற்காலை வீடு திரும்பி உள்ளனர். இவர் களுக்கு உதவ குறிப்பிட்ட அலுவ லர் மற்றும் அதிகாரிகள் வர வழைக்கப்பட்டிருந்தனர். ஒரு புதிய செயல்திட்டம் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது முக்கிய நோக்கமாக இருந்தது. இதுபோன்ற சந்தர்ப்பங் களை இந்தியா இதுவரை சந்தித்ததாகத் தெரியவில்லை. எனவே அமெரிக்க செயல் முறையை பின்பற்றி தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத் தினர் சுமார் 10 பேர் மற்றும் தீவிரவாதிகள் என குறைந்தபட்சம் 60 பேர் கொல்லப்பட்டிருக்கலாம். இந்த துல்லியமான தாக்குதல் எந்தத் தடையும் இன்றி நிறைவேற் றப்பட்டிருப்பதால், இந்தமுறையை மேலும் பலப்படுத்தி ஒரு தரமான செயல்பாட்டு முறையை கடைப் பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, இராக் அதிபர் சதாம் உசேன், அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் ஆகியோரை பிடிக்க அமெரிக்கா பயன்படுத்திய தாக்குதல் முறை குறித்து அதிகாரிகள் குழு தனியாகத் தகவல்களை திரட்டியது” என்று தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடன் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ரகசியக் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட அன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தனது துறை அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். பின்லேடன் அமெரிக்க வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் கிடைத்த மகிழ்ச்சியால் அலறி விடாமல் தனது வாயை பொத்தியபடி பேசியதாக கூறப்படுவது உண்டு.

இதற்கு முன் 1990-ல் இராக் அதிபர் சதாம் உசேனை கைது செய்வதற்கு அவரது சொந்த ஊரில் அமெரிக்கப் படையினர் ரகசியமாக ஊடுருவி இருந்தனர். இந்த செயல்முறை தொடர்பான தகவல்களை திரட்டிய இந்தியா அதில் தனது சொந்த முயற்சியையும் புகுத்தி வெற்றி கண்டுள்ளது. இந்தியா தரப்பில் உயிரிழப்பு இன்றி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் நூறு சதவீதம் வெற்றி எனக் கூறப்படுகிறது.

1999-ம் ஆண்டு, டிசம்பர் 24-ம் தேதி காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், அமிர்தசரஸ் வழியாக காந்தகாருக்கு கடத்தப்பட்டது வரை இந்தியாவிடம் திடீரென அதிரடி தாக்குதல் நடத்துவதற்காக ஒரு தரமான செயல்பாட்டு முறை இல்லாமல் இருந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ராவால் அது முதன்முறையாக அமல்படுத்தப்பட்டது. இதையே பிறகு வந்த மன்மோகன்சிங் அரசும் கடைபிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடியால் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட தோவல், இந்த முறையை மாற்றுவதற்காக தொடர்ந்து முயற்சித்து வந்தார். நவீன ஆயுதங்களுடன் பயிற்சி பெற்றுள்ள தீவிரவாதிகளை சமாளிக்க பழைய முறை போதாது என்பது தோவலின் எண்ணமாக இருந்தது. தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட வெற்றிகரமான தாக்குதலால் இந்திய ராணுவத்தினரும் முழு திருப்தியில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in