Published : 14 Jun 2014 09:43 AM
Last Updated : 14 Jun 2014 09:43 AM

வறட்சியை சமாளிக்க தயார்: வேளாண் அமைச்சர் அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இந்த ஆண்டு வறட்சியை தவிர்க்க முடியாது, எனினும் அதனை சமாளிக்க மத்திய அரசு தயார் நிலையில் உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கடும் கோடையின் காரணமாக இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்ததைவிட குறைவாக இருக்கும் எனத் தெரிகிறது. இதன் காரணமாக ஆந்திரா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

எனவே வறட்சியை சமாளிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இப்போதே இறங்கியுள்ளது. இதுதொடர்பாக மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன்சிங், பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘அவசரகால நிதி உதவி திட்டங்கள் சுமார் 500 மாவட்டங்களுக்காக திட்டமிடப் பட்டுள்ளது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு கடன் வசதி மற்றும் மானிய விலையில் டீசல் வழங்கப்படும்’ எனத் தெரிவித்தார். அதேநேரம் வறட்சியின் காரணமாக விலைவாசி உயர்வதைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் இது குறித்த பரிந்துரைகள் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட இருப்பதாகவும் ராதா மோகன்சிங் தெரிவித்தார்.

இது தொடர்பாக விவாதிக்க அனைத்து மாநில வேளாண் அமைச்சர்களை அடுத்த வாரம் அழைத்து பேசவிருப்பதாகவும் அவர் நிருபர்களிடம் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x