

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 9 நாட்கள் வரை உற்சவரான மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் விழா நிறைவு நாளான நேற்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சி தொடங்கியது. இதையொட்டி சக்கரத்தாழ்வார், மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு வராக சுவாமி கோயில் அருகே சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெற்றது. அதன் பின்னர், குளத்தில் சக்கரத்தாழ்வாரின் தீர்த்தவாரி நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், புனித நீராடினர். பின்னர் மாலையில் கொடி இறக்க நிகழ்ச்சி நடந்தது.
இந்த ஆண்டு பிரம்மோற்சவம் குறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் கூறியதாவது:
கடந்த 8 நாட்களில் 6.97 லட்சம் பக்தர்கள் பிரம்மோற்சவத்தில் பங்கேற்றுள்ளனர். உண்டியல் மூலம் ரூ. 20.24 கோடி காணிக்கை யாக செலுத்தியுள்ளனர்.
பிரசாதங்கள் விற்பனை மூலம் ரூ. 4.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 29,96,736 பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 5.38 லட்சம் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விடுதிகளின் வாடகை மட்டும் கடந்த 8 நாட்களில் ரூ. 1.22 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 3,45,142 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். இதற்காக 1,450 சவரத் தொழிலாளர்கள் தினமும் பணி செய்துள்ளனர்.
பிரம்மோற்சவத்தில் 15 லட்சம் இலவச பேருக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8.98 லட்சம் பேருக்கு இலவச சிற்றுண்டிகள் வழங்கப் பட்டுள்ளன. 2,800 தேவஸ்தான கண்காணிப்பாளர்கள், 4,500 போலீஸார், 1,300 வாரி சேவகர்கள், 1,200 ஸ்கவுட் படையினர், 300 ஊர்க்காவல் படையினர் மற்றும் ஆக்டோபஸ் கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.