

காஷ்மீரில் கடந்த மாதம் 20 இந்திய வீரர்களைப் பலிகொண்ட உரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
உரி தாக்குதலில் இறந்த பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தாய் அமைப்பான ஜமாத்-உத்-தவா ஏற்பாடு செய்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், குஜ்ரன்வாலா நகரில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, உருது மொழியில் உள்ள சுவரொட்டிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
“காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் அபு சராக்கா என்கிற முகம்மது அனாஸ் தாக்குதல் நடத்தி உயிர்த்தியாகம் செய்துள்ளார். இவர் காஷ்மீரில் 177 இந்து படை வீரர்களைக் கொன்றுள்ளார். அவருக்கு நினைவஞ்சலி மற்றும் பிரார்த்தனைக் கூட்டம் குஜ்ரன்வாலா நகரில் படா நலா நவாப் சவுக் அருகில் நடைபெறும். ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயீத் இதில் பங்கேற்கிறார்” என்று அந்த சுவரொட்டியில் கூறப்பட்டுள்ளது.
உரி தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களின் தொடர்பை அந்நாடு மறுத்துவரும் வேளையில் இந்த சுவரொட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சுவரொட்டி சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி யதைத் தொடர்ந்து, இத்தகவல் ஒரு புரளி என ஜமாத்-உத்-தவா கூறியுள்ளது. என்றாலும் டான் நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் அப்பாஸ் நாசிர் கூறும்போது, ‘‘அந்த சுவரொட்டியில் உள்ள தகவல் உண்மைதான். தற்போது அந்த அஞ்சலி நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.