

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு அநீதி இழைத்துவிட்டதாகக் கூறி, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
கர்நாடகா சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே அவர் இன்று (சனிக்கிழமை) தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
அம்பேத்கர், மகாத்மா காந்தி சிலைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் அவர் தனது போராட்டத்தைத் தொடங்கினார்.
அவர் கூறியதாவது:
"காவிரி வழக்கில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இத்தருணத்தில் இவ்விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு மிகவும் அவசியம்.
காவிரி பிரச்சினை குறித்து பிரதமர் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியுள்ளார் எனத் தெரிகிறது. இப்பிரச்சினைக்கு யாரையும் குறை கூற முடியாது.
தமிழகத்துக்கு அநீதி இழைக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. கர்நாடக மக்களுக்கு குடிப்பதற்கே நீர் இல்லை என்றாலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்.
இரு மாநிலத்திலும் கள நிலவரத்தை அறிய நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும். முதலில் கர்நாடகாவின் உண்மை நிலவரத்தை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவு கர்நாடகாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை.
இருந்தாலும், காவிரி பிரச்சினையில் கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
'6000 கன அடி தண்ணீர்.. இறுதி எச்சரிக்கை'
முன்னதாக வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம், வரும் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். கர்நாடக அரசு இறுதி எச்சரிக்கையாக ஒரு வாய்ப்பை வழங்குகிறோம். தமிழகத்துக்கு வரும் 6-ம் தேதி வரை நொடிக்கு 6,000 கனஅடி நீரை, கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று (சனிக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.