Published : 20 Aug 2022 06:11 AM
Last Updated : 20 Aug 2022 06:11 AM

கேரளாவில் உள்ள ராகுல் காந்தி எம்.பி. அலுவலகத்தில் காந்தியின் படத்தை சேதப்படுத்திய 4 காங்கிரஸ் தொண்டர்கள் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி எம்.பி. அலுவலகத்தில் தேசத் தந்தை மாகாத்மா காந்தி படத்தை சேதப்படுத்தியதாக 4 காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றிபெற்றார். வயநாடு மாவட்ட தலைநகர் கல்பேட்டையில் ராகுலின் எம்.பி. அலுவலகம் செயல்படுகிறது.

கடந்த ஜூன் 24-ம் தேதி ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் ராகுலின் எம்.பி. அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த 2-ம் தேதி மாநில சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் காவல் துறை புகைப்பட கலைஞர் அனைத்து இடங்களையும் புகைப்படம் எடுத்தார். அப்போது மகாத்மா காந்தியின் படத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

ஆனால் அன்று மாலையில் காந்தியின் படம் தரையில் விழுந்துநொறுங்கி கிடந்துள்ளது. காங்கிரஸ் தொண்டர்களே காந்தியின் படத்தை சேதப்படுத்தி உள்ளனர். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்த சூழலில் காந்தி படத்தைசேதப்படுத்தியதாக ராகுல் காந்தியின் அலுவலக உதவியாளர் ரதீஷ் குமார், காங்கிரஸ் தொண்டர்கள் நவுஷத், முஜிப், எஸ்.ஆர்.ராகுல் ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x