

ஆந்திராவின் புதிய தலைநகராக உருவாகி வரும் அமராவதியில் நேற்று முதல்வர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக குண்டூர்-விஜயவாடா இடையே 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமரவாதி நகரம் உருவாகி வருகிறது. தலைமைச் செயலக கட்டிடத்திற்கான பணி அண்மையில் நிறைவடைந் ததை தொடர்ந்து, இங்கிருந்த படியே பல்வேறு அரசுத் துறைகளின் பணிகள் செயல்பட தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தலைமைச் செயலக அலுவலகத்தில் கட்டி முடிக்கப்பட்ட முதல்வர் அலுவலகம் நேற்று முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் அமர்ந்து தனது முதல் பணியாக மகளிர் சுய உதவிக் குழுவினரின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான கோப்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார். பின்னர் அவர், ‘‘சுய உதவி குழுவினருக்கு விரைவில் ரூ.2,500 கோடி அளவுக்கு கடன் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதியளித்தார்.
முன்னதாக முதல்வர் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர், முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.