

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கக் கோரும் மனு தொடர்பாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் தங்கள் தரப்பின் எழுத்துப்பூர்வ வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன.
கர்நாடகா, தமிழகம் இடையிலான காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன. கடந்த 19-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசுகளின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
அப்போது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வ ராய், ஏ.என்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மீதான மேல்முறையீட்டு மனுவை விசாரிப் பதற்கான முகாந்திரம் தொடர்பாக மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை அக்டோபர் 24-ம் (நேற்று) தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளும் எழுத்துப்பூர்வ வாதத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்''என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி நேற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பின் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மத்திய அரசு தனது எழுத்துப்பூர்வ வாதத்தை வரும் புதன்கிழமைக்குள் (நாளை) தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டனர்.
இதற்கிடையே கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளும் தங்கள் தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தனர். இதில் கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநில அரசுகள் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
புதுச்சேரி அரசு மத்திய அரசின் முடிவை ஆதரிக்கும் வகையில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது. அந்த தீர்ப்பே இறுதியானது என்பதால் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கக் கூடாது என கோரியுள்ளதாக தெரிகிறது.