Last Updated : 14 Oct, 2016 06:34 PM

 

Published : 14 Oct 2016 06:34 PM
Last Updated : 14 Oct 2016 06:34 PM

மீண்டும் ராமர் கோயில் வாக்குறுதி: உ.பி. தேர்தலில் பாஜக வியூகம்

வரவிருக்கும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், அயோத்தி ராமர் கோயில் பிரச்சனையை மீண்டும் பாரதிய ஜனதா கையில் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உ.பி.தலைநகரான லக்னோவில் பிரதரம் நரேந்தர மோடி ராம் லீலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ‘ராமர் கோயில்’ விவகாரம் மீண்டும் பிரச்சார முக்கியத்துவம் பெறுவதன் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி மற்றும் ராமர் கோயில் பிரச்சனை இந்திய அரசியலை மாற்றி அமைத்தது. இப்பிரச்சனையை கையில் எடுத்த பாஜக, மத்தியிலும் உ.பி.யிலும் தன் கூட்டணி ஆட்சிகளை அமைத்திருந்தது. பிறகு ராமர் கோயில் மீதான நீதிமன்ற வழக்குகளால் அது கட்டப்பட முடியாமல் உள்ளது. இதனால், இடையில் ராமர் கோயில் விவகாரத்தை கைவிட்ட பாஜக, உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் அதை மீண்டும் முன்னிறுத்த இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதன் துவக்கமாக கடந்த செவ்வாய் கிழமை லக்னோவில் நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர் மோடி முதன்முறையாகக் கலந்து கொண்டார். இதில் ஆற்றிய தன் உரையில் துவக்கத்திலும், இறுதியிலும் ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கோஷமிட்டு முடித்திருந்தார். அப்போது அவர், ‘இந்த கோஷம் ஒவ்வொரு வீட்டிற்கும் எட்டும் வகையில் சத்தமிட்டு கூறுங்கள்’ என்றும் கூட்டத்தினரிடம் கோரியிருந்தார்.

இத்துடன் ராமரின் சிறப்பை பற்றி அதில் நீண்ட உரையாற்றி இருந்தார் மோடி. பிரதமர் ஆன பின் மோடி தனது எந்த கூட்டத்திலும் இதுபோல் அவர் கோஷமிடவில்லை எனக் கருதப்படுகிறது. இந்த விழாவில் மோடிக்கு ராமரின் வில் அம்பு, அனுமனின் கதாயுதம் மற்றும் விஷ்ணுவின் சின்னமாக சுதர்ஷன் சக்ரமும் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது. இவை அனைத்தும் உ.பி. தேர்தலை மனதில் வைத்து மறைமுகமாக மோடி துவக்கியப் பிரச்சாரம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து உபி மாநில பாஜக நிர்வாகிகள் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘பிரதமர் லக்னோவின் ராம் லீலாவில் கலந்து கொண்டது அரசியல் நிகழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. உ.பி.க்கு உகந்த இந்துத்துவா வகை அரசியலை துவக்கவே அவர் இங்கு வந்திருந்தார். இதன்மூலம், பாஜகவினருக்கு ஒரு சமிக்ஞை கொடுக்கப்பட்டு விட்டது. இதை உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் எப்படி பயன்படுத்துவது என எங்கள் கட்சியினருக்கு தெரியும்.’ எனத் தெரிவித்தனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் உ.பி. மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான அமர்நாத் அகர்வால் கூறுகையில், ‘இதுவரையும் ராமர் கோயில் என்பது தன் கலாச்சாரத்தின் வெளிப்பாடாகக் கூறி வந்தனர். ஆனால், பொதுமக்களின் முன் நம் நாட்டின் பிரதமர் ராமரை வழிப்பட்டதுடன் ஜெய்ஸ்ரீராம் எனக் கோஷமும் இடச் சொல்லியிருக்கிறார். இதை வைத்து, சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் தேர்தல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என வெளிப்படையாகத் தெரிந்து விட்டது. இதற்கு முன் எந்தப் பிரதமரும் இதுபோல் பொது மேடைகளில் கோஷமிட்டது கிடையாது.’ எனக் கூறுகிறார்.

முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தனிமெஜாரிட்டியுடன் ஆளும் உபியில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது. இதன் எதிர்கட்சியாக மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி உள்ளது. மூன்றாவதாக பாஜக மற்றும் நான்காவது இடத்தில் காங்கிரஸும் இடம் வகிக்கின்றன. ஆனால், கடந்த 2014-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் உபியில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாஜகவிற்கு 71 இடங்கள் கிடைத்திருந்தன. இதன் கூட்டணியான அப்னாதளம் கட்சிக்கு இரு இடங்கள் கிடைத்தன. இதனால், உபியின் மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் செய்யத் துவங்கி விட்டன. டிசம்பர் 24-ல் வரவிருக்கும் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயின் 92 ஆவது பிறந்த நாளில் பாஜகவிற்காக பிரதமர் மோடி தன் முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x