சிங்கூரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயத்தை தொடங்கி வைத்தார் மம்தா

சிங்கூரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயத்தை தொடங்கி வைத்தார் மம்தா
Updated on
1 min read

சிங்கூரில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் விவசாயத்தை தொடங்கி வைத்தார்.

நிலத்தை திரும்பப் பெற்ற விவசாயிகளை மம்தா பானர்ஜி சந்தித்து கலந்துரையாடி வருகிறார். கடுகு விதைகள் போன்றவற்றை தூவி சில இடங்களில் விவசாயத்தையும் மீண்டும் தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மம்தா கூறும்போது, ‘65 ஏக்கர் தவிர, மீதமுள்ள 997 ஏக்கர் நிலமும், நவம்பர் 10-ம் தேதிக்குள் விவசாயிகளுக்கு திருப்பியளிக்க தயார் நிலையில் உள்ளன. பணிகள் எல்லாம் முடிந்த பின், இப்பகுதியில் சிங்கூர் போராட்டத்தை நினைவுகூரும் சின்னம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

மேற்குவங்க மாநிலம், சிங்கூரில் டாடா நிறுவனத்தின் நேனோ கார் தொழிற்சாலைக்காக, 1,000 ஏக்கர் விவசாய நிலத்தை மாநில அரசு 2006-ம் ஆண்டில் வலுக்கட்டாயமாக கையகப்படுத்திக் கொடுத்தது.

அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போது முதல்வருமான மம்தா பானர்ஜி உள்ளிட்டோரின் தொடர் போராட்டம் காரணமாக, டாடா நிறுவனம் தனது தொழிற்சாலையை குஜராத்துக்கு மாற்றியது.

எனினும், மாநில அரசிடம் இருந்து பெற்ற நிலத்தை வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதாகக் கூறி அங்கிருந்து அகல டாடா நிறுவனம் மறுத்துவந்தது. இதுதொடர்பாக நடந்து வந்த வழக்கு விசாரணையில் அண்மையில் உச்ச நீதிமன்றம் தீரப்பளித்தது.

சிங்கூரில் மக்களின் பொது பயன்பாட்டுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை என்பதால், அந்த ஒப்பந்தம் செல்லாது என்றும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 12 வாரத்துக்குள் விவசாயிகளிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேனோ தொழிற்சாலைக்காக அமைக்கப்பட்டிருந்த கூரைகள் உள்ளிட்ட கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்பட்டு தரை மட்டமாக்கும் பணிகளை மாநில அரசு துரித கதியில் மேற்கொண்டு வருகிறது.

முதல்கட்டமாக 103 ஏக்கர் நிலம், 298 விவசாயிகளுக்கு முழுமையாக ஒப்படைக்கப்பட்டு விட்டது. பட்டா உள்ளிட்ட அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த நிலையில், நிலத்தில் பயிரிடமும் விவசாயிகள் தயாராகிவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in