

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய உயர்நிலை தொழில்நுட்பக் குழு கர்நாடக மாநிலத்தில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள நீர் இருப்பை நேரில் ஆய்வு செய்தனர். இன்று கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளை நேரில் பார்வையிடுகின்றனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் உயர் மட்டத் தொழில்நுட்பக் குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவில் மத்திய நீர் ஆணையப் பிரதிநிதி சைய மசூ ஹுசேன் ( நீர் மற்றும் திட்டமிடல்), ஹைதராபாத்தில் உள்ள மத்திய நீர் ஆணையத்தின் கிருஷ்ணா, கோதாவரிப் பாசன அமைப்பின் தலைமைப் பொறியாளர் ஆர்.கே. குப்தா, மத்திய நீர்வளத் துறை முதன்மை செயலர் ராகேஷ் சிங், தமிழகப் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபா கர், காவிரி தொழில் நுட்பப் பிரிவின் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன், கர்நாடகக் காவிரி நீர் நிர்வாக ஆணைய இயக்குநர் சிக்கராயப்பா, கர்நாடக நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் சிவசங்கர், புதுச்சேரி தலைமைப் பொறியாளர் சுவாமிநாதன், முதன்மைப் பொறியாளர் சண்முக சுந்தரம், பொறியாளர் ராஜசேகர், கேரளப் பொதுப் பணித்துறை முதன்மை செயலர் மஹானுதேவன் ஆகியோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் நேற்று பெங்களூருவில் உள்ள கர்நாடக தலைமைச் செயலகத்துக்குச் சென்றனர். அங்கு அவர்களை வரவேற்ற கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் மற்றும் தலைமை செயலர் சுபாஷ் சந்திரா ஆகியோர் காவிரியின் குறுக்கேயுள்ள அணைகளில் உள்ள நீர் இருப்பு, வறட்சி நிலை, குடிநீர்த் தேவை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய 30 பக்க அறிக்கையை ஜி.எஸ்.ஜாவிடம் வழங்கினார்.
தொடர்ந்து ஜி.எஸ். ஜா தலைமை யில் 4 மாநில அதிகாரிகளின் ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் இக்குழுவினர் பெங்களூரு வில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டியா மாவட்டத்துக்குச் சென்றனர். அங்குள்ள மத்தூர், மலவள்ளி, பாண்டவப்புரா ஆகிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகள், தடுப்பு அணைகள், காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளை ஆய்வு செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, நெல் பயிர்களையும், சில விவரங்களையும் விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
தொழில்நுட்பக் குழுவினர் இன்று காலை கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளைப் பார்வையிட உள்ளனர். கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப் பாசனப் பகுதிகளை ஆய்வு செய்த பிறகு தமிழகத்தில் ஆய்வு செய்யவுள்ளனர்.
தொழில்நுட்பக் குழு தலைவர் ஜி.எஸ்.ஜா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வரும் 15-ம் தேதிக் குள் 4 மாநிலங்களில் உள்ள காவிரி பாசனப் பகுதிகளையும் பார்வையிட்டு முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். உண்மையை கண்டறிந்து, இரு மாநிலங் களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் இருக்கும் நீரைப் பங்கிடுவோம்''என்றார்.