

முஸ்லிம் சமுதாயத்தில் 3 முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து பெறும் முறையை ஒழிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், ஹைதராபாத் ஹைடெக் சிட்டி பகுதியில் உள்ள இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் சார்பில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
நம் நாட்டு கலாச்சாரம் உலகத் துக்கே வழிகாட்டியாக விளங்கு கிறது. நம் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட பல்துறை நிபுணர்கள் வெளி நாடுகளில் உள்ள பிரபல நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.
எந்த நாட்டின் மீதும் வேண்டுமென்றே போர் தொடுக்கும் எண்ணம் நமக்கு இல்லை. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைவிட நம் நாட்டு பொருளாதார வளர்ச்சி பெருகி வருகிறது. உள்நாடு, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்க பிரதமர் மோடி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
நம் நாட்டில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தினர் 3 முறை ‘தலாக்’ கூறி மனைவியை விவாகரத்து செய்வது நடைமுறையில் உள்ளது. இது சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும், மனித குலத்துக்கும் எதிரானது. முஸ்லிம் பெண்களே எதிர்ப்பதால், தலாக் முறையை ரத்து செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. எனவே, இந்த முறையை ஒழிக்க இதுதான் சரியான தருணம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.