

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் கர்நாடக மாநில அதிமுகவினர் சிறப்பு பூஜை நடத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். இந்நிலையில் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி, அவரது குல தெய்வமான மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் கர்நாடக மாநில அதிமுகவினர் நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடத்தினர்.
கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி தலைமை யில், ஏராளமான அதிமுகவினர் இதில் பங்கேற்றனர். ஜெயலலிதா விரைவில் குணமடைந்து, தமிழகத்தைச் சிறப்பாக ஆள வேண்டும் என வேண்டி வெள்ளி ரதத்தையும் அதிமுகவினர் இழுத்தனர்.
ஜெ. காணிக்கைக்கு எதிர்ப்பு
இதனிடையே மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு முதல்வர் ஜெயலலிதா சார்பில் வழங்கப்பட்ட ரூ.1.60 கோடி மதிப்பிலான காணிக்கையை ஏற்கக் கூடாது என, கன்னட அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயலலிதாவுக்குச் சொந்தமான ஜெயா பப்ளிகேஷன்ஸ், கொடநாடு எஸ்டேட் ஆகிய நிறுவனங்களின் சார்பாக மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான தங்கக் கவசம் மற்றும் அணிகலன்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன.
இதைக் கண்டித்து கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கி யுள்ளனர். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக செயல் பட்ட ஜெயலலிதா வழங்கிய காணிக்கையை ஏற்கக் கூடாது. சாமுண்டீஸ்வரி கோயில் நிர்வாகம் அந்த நகைகளை உடனே திருப்பி அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.