Published : 18 Aug 2022 10:05 PM
Last Updated : 18 Aug 2022 10:05 PM

பில்கிஸ் பானு வழக்கு | “11 பேரும் நல்ல சன்ஸ்காரம் கொண்டவர்கள்” - குஜராத் பாஜக எம்எல்ஏ கருத்து

கோத்ரா: பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 பேரும் "பிராமணர்கள்" என்றும் "நல்ல சன்ஸ்காரம்" உடையவர்கள் என்றும் பாஜக எம்எல்ஏ பேசியுள்ளார்.

கோத்ரா தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர், சி.கே. ரவுல்ஜி. அவர் தான் இந்தக் கூற்றைத் தெரிவித்துள்ளார். 11 குற்றவாளிகளை விடுவிக்க ஒருமனதாக முடிவு செய்த குஜராத் அரசின் குழுவில் அங்கம் வகித்த இரண்டு பாஜக தலைவர்களில் சிகே ரவுல்ஜியும் ஒருவர். இதையடுத்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “11 பேரும் ஏதாவது குற்றம் செய்தார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் குற்றம் செய்யும் எண்ணம் அவர்களிடத்தில் இல்லை.

மேலும் அவர்கள் பிராமணர்கள். பிராமணர்கள் நல்ல சன்ஸ்காரம் (நல்ல நெறிமுறைகள் கொண்டவர்கள் மற்றும் ஒழுக்கமானவர்கள்) கொண்டவர்கள் என்று அறியப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை எதோ மூலையில் வைத்து தண்டிப்பது யாரோ ஒருவரின் தவறான நோக்கமாக இருக்கலாம். எனினும், சிறையில் அவர்களின் நடத்தை நன்றாக இருந்தது" என்று ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

சி.கே. ரவுல்ஜி

இவரின் ஆதரவு பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சதீஷ் ரெட்டி என்பவர், பாஜக எம்எல்ஏ சி.கே. ரவுல்ஜி பேசிய வீடியோவை பகிர்ந்து, "பாலியல் குற்றவாளிகளை பாஜக இப்போது 'நல்ல மனிதர்கள்' என்று குறிப்பிடுகிறது" என்று விமர்சித்துள்ளார். இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விடுதலை விவகாரத்தை சாடியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x