Published : 17 Aug 2022 11:02 AM
Last Updated : 17 Aug 2022 11:02 AM

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி | 'பெஸ்ட் டீலை பெறுவது என் தார்மீகக் கடமை' - அமைச்சர் ஜெய்சங்கர்

"நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணெய் இறக்குமதியில் பெஸ்ட் டீலைப் பெறுவது என்பது தனது தார்மீகக் கடமை" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா பெற்றது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்தும்கூட அடிபணியாமல் இந்தியா ரஷ்ய எண்ணெய்யைப் பெற்றது. இந்தக் கொள்கையை எடுத்தற்காக இந்திய வெளியுறவு அமைச்சகம் உலகளவில் பாராட்டைப் பெற்றது. அண்மையில் கூட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்திய வெள்யுறவுக் கொள்கையை வெகுவாகப் பாராட்டியிருந்தார். இந்தியாவைப் போல் பாகிஸ்தானும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் பெற வேண்டும். அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணியக் கூடாது என்று புதிய பிரதமருக்கு வலியுறுத்திக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், ஒவ்வொரு தேசமுமே எரிபொருள் விலையை சமாளிக்க ஏதேனும் நடவடிக்கையை எடுக்கும். நம் இந்திய தேசமும் அதையே செய்துள்ளது.

எண்ணெய், எரிவாயு விலை அதிகமாகவே உள்ளது. பாரம்பரியமாக எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள் பலவும் ஐரோப்பிய சந்தைகளில் கவனத்தை திருப்பியுள்ளன. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளை ஐரோப்பிய நாடுகள் நம்பத் தொடங்கியுள்ளன.

இந்த மாதிரியான சூழலில் ஒவ்வொரு நாடும் தங்களுக்கான சிறந்த சந்தையை உறுதிப்படுத்த முயலும். ஆனால் நமது அணுகுமுறை சற்று வித்தியாசமானது. நாம் பாதுகாப்பு நடவடிக்கையாக இதனைச் செய்யாமல் நமது விருப்பங்களை முன்வைத்ததில் வெளிப்படையாக நேர்மையாக இருக்கிறோம். இந்திய மக்களின் பெர் கேப்பிடா இன்கம் எனப்படும் சராசரி வருமானம் 2000 டாலர் என்றளவில் உள்ளது. இந்தச் சூழலில் நாம் சிறந்த எண்ணெய் விலையை ஒப்பந்தம் செய்வது எனது தார்மீகக் கடமை.

இந்தியா ரஷ்யாவிடமிருந்து ஒரு மாதம் முழுவதும் வாங்கும் எண்ணெய்யின் அளவு ஐரோப்பிய நாடுகள் ஒரு மதிய வேளையில் கொள்முதல் செய்யும் அளவை ஒத்தது என்று அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கினார். இந்தியா தற்போதைய நிலவரப்படி மாதம் 9,50,000 பேரல் எண்ணெய் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது என்றும் அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x