Published : 17 Aug 2022 09:43 AM
Last Updated : 17 Aug 2022 09:43 AM

ஜம்முவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்பு: போலீஸார் தீவிர விசாரணை

ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜம்முவின் சித்ரா பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர்களின் அடையாளம் தெரியவந்துள்ளது. சகினா பேகம். அவரின் இரண்டு மகள்கள் நசீமா அக்தர், ரூபீனா பானு, மகன் ஜாஃபர் சலீம், உறவினர்கள் நூர் உல் ஹபீப், சாஜத் அகமது ஆகியோர் உயிரிழந்தவர்கள்.

இவர்களில் இருவரின் சடலம் ஒரு வீட்டிலும், எஞ்சிய 4 பேரின் உடல் பக்கத்திலேயே உள்ள அவர்களின் இன்னொரு வீட்டிலும் கண்டெடுக்கப்பட்டது. சடலங்கள் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உடல்களில் புல்லட் காயம் ஏதுமில்லை என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் சதியா இல்லை தற்கொலையா, கொலையா என்று விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் கிடந்த இரண்டு வீடுகளின் கூரையிலும் தேசியக் கொடி கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பண்டிட்டுகளுக்கு அச்சுறுத்தல்: ஜம்முவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் இறந்துள்ள நிலையில், காஷ்மீரில் அன்றாடம் தீவிரவாத தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன.

காஷ்மீரில் நேற்று (ஆக.16) ஆப்பிள் தோட்டத்தில் புகுந்து பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்களை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்தார்.

காஷ்மீரில் பண்டிட் சிறுபான்மையினர் சமூகத்தினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது சமீப காலமாகவே அதிகமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் புட்காம் மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் காஷ்மீர் பண்டிட் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் பண்டிட் சமூகத்தினர் பெரும் போராட்டங்கள் நடத்தினர். தங்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லை ஆகையால், தாங்கள் அனைவரும் ஜம்முவுக்கே திரும்பிச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி போராட்டங்களை நடத்தினர். புட்காம் சம்பவத்திற்குப் பின்னர் 5000 பண்டிட்டுகள் அரசு வேலைகளுக்குச் செல்லாமல் கிடைத்த வேலையை பாதுகாப்பாக செய்ய ஆரம்பித்தனர்.

இந்நிலையில் அங்கு பண்டிட்டுகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தாக்குதலுக்கு காஷ்மீர் விடுதலை வீரர்கள் ( 'Kashmir Freedom Fighters') என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தடை செய்யப்பட்ட அல் பதர் அமைப்பின் கிளை. இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் காஷ்மீரில் மூவர்ணக் கொடி பேரணியை ஊக்குவித்ததற்காக பண்டிட் சகோதரர்களை குறிவைத்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x