

திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 6-ம் நாளான நேற்று ஹனுமந்த வாகனத்தில் பவனி வந்து மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தங்க ரத பவனியும், கஜ வாகன சேவையும் நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பவனி வந்து மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று முன் தினம் முக்கிய நிகழ்வான கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மலையப்ப சுவாமியை தரிசித்தனர்.
இந்நிலையில் பிரம்மோற்சவ விழாவின் 6-ம் நாளான நேற்று காலை சிறிய திருவடியாக போற்றப்படும் ஹனுமந்த வாகனத்தில் கோதண்ட ராமராக அமர்ந்து மலையப்ப சுவாமி பவனி வந்தார்.
தொடர்ந்து நேற்று மாலை தேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு நடந்த கஜ வாகன சேவையிலும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதற்கிடையில் தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் திருமலையில் நேற்று முதலே அதிக அளவில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் சுவாமி தரிசனத்துக்காக 12 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.