Published : 17 Aug 2022 01:04 AM
Last Updated : 17 Aug 2022 01:04 AM

ராஜஸ்தான் | பட்டியலின மாணவர் மரண விவகாரம் - அரசியல் நெருக்கடியில் முதல்வர் அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தனியார் பள்ளியில் பட்டியலின மாணவர் ஒருவர் தன் ஆசிரியரின் பானையில் குடிநீர் பருகியதால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் நெருக்கடியாக மாறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ளது சுரானா கிராமம். இதன் செய்லா காவல்நிலையப் பகுதியில் சரஸ்வதி வித்யா மந்திர் எனும் பெயரில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் இந்திர குமார் ( 9 வயது ) மெக்வால் என்ற மாணவர் மூன்றாம் வகுப்பு பயின்றுவந்தார். இவர் பட்டியலின மாணவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜுலை 20 ஆம் தேதி பள்ளி சென்ற மாணவர் இந்திர குமார் கடும் தாகம் ஏற்பட்டதால் வகுப்பிலிருந்த பானையில் குடிநீர் எடுத்துக் குடித்துள்ளார்.

அதன்பின்னர் தான் அப்பானை வகுப்பாசிரியரின் பானை என்பது மாணவனுக்குத் தெரிந்துள்ளது. இதை அறிந்த இந்திர குமாரின் ஆசிரியர் சஹைல்சிங்கி சின்னஞ்சிறு சிறுவன் என்றுகூட பாராமல் மாணவனைக் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் காதுகளின் ஜவ்வுகள் கிழிந்ததுடன் கடுமையான ஊமைக் காயங்களும் ஏற்பட்டுள்ளன. இதில் படுகாயமடைந்த சிறுவன் இந்திர குமார் குஜராத் மாநிலம் அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சில தினங்கள் முன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கில், பள்ளியின் ஆசிரியர் சஹைல்சிங் மீது எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுவன் உயிரிழப்பு முதல்வர் அசோக் கெலாட்டுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான பாஜகவின் நெருக்கடிகளைத் தாண்டி சொந்த கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகளாலும் நெருக்கடியை சந்தித்து வருகிறார் முதல்வர் கெலாட். காங்கிரஸ் எம்எல்ஏ பனசந்த் மேக்வால், மரணம் தன்னை மிகவும் வேதனைப்படுத்துவதாகக் கூறி தனது ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கு அனுப்பியுள்ளார். ஆளும்கட்சி எம்எல்ஏவான அவர் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, இந்த வழக்கில் போலீஸ் விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே.

இவர் ஒருபுறம் என்றால், அசோக் கெலாட்டின் போட்டித் தலைவராக கருதப்படும் காங்கிரஸின் சச்சின் பைலட், இறந்த சிறுவனின் குடும்பத்தை நேரில் சந்தித்துள்ளார். சந்திப்புக்கு பின் பேசியவர், "இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தலித் சமுதாய மக்களுடன் நாம் துணை நிற்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிர்காலத்திலும் அவ்வாறே செய்யும் என நம்புவோம்" என்று அரசை விமர்சிக்கும் விதமாக பேசினார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த இந்த இருவரும் சிறுவனின் குடும்பத்தை சந்தித்தது அரசியல் ரீதியாக கெலாட்டுக்கு பின்னடைவை ஏற்படுத்த, தனது பங்கிற்கு அமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான கோவிந்த் சிங் தோதாஸ்ராவை ஜலோருக்கு அனுப்பி வைத்து சிறுவனின் குடும்பத்தைச் சந்திக்க வைத்தார்.

ஏற்கனவே பாஜக இந்த விவகாரத்தில், “சிறுவனின் மரணம் மாநிலத்துக்கு அவமானகரமானது. ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் எப்போது ராஜஸ்தானில் தலித்துகளுக்கு நீதியை உறுதி செய்ய கெலாட்டை பரிந்துரைப்பார்கள் என்பதை விளக்க வேண்டும்” என்று மாநில அரசை குறிவைத்து தாக்கி வருகின்றனர். இதனால், சிறுவனின் மரணம் ராஜஸ்தானில் முதல்வர் கெலாட்டை அரசியல் நெருக்கடிகளுக்கு தள்ளியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x