

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஆப்பிள் தோட்டத்தில் புகுந்து பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்களை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்தார்.
காஷ்மீரில் பண்டிட் சிறுபான்மையினர் சமூகத்தினர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது சமீப காலமாகவே அதிகமாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் புட்காம் மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் காஷ்மீர் பண்டிட் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் பண்டிட் சமூகத்தினர் பெரும் போராட்டங்கள் நடத்தினர். தங்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லை ஆகையால், தாங்கள் அனைவரும் ஜம்முவுக்கே திரும்பிச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி போராட்டங்களை நடத்தினர். புட்காம் சம்பவத்திற்குப் பின்னர் 5000 பண்டிட்டுகள் அரசு வேலைகளுக்குச் செல்லாமல் கிடைத்த வேலையை பாதுகாப்பாக செய்ய ஆரம்பித்தனர்.
இந்நிலையில், சோபியான் மாவட்டத்தில் இன்று ஆப்பிள் தோட்டத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள், அங்கு வேலை செய்து கொண்டிருந்த பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்தார்.
தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவர் பெயர் சுனில் குமார் என்றும், காயமடைந்தவர் பெயர் பிண்டு குமார் என்பதும் தெரியவந்துள்ளது.
காஷ்மீரில் கடந்த அக்டோபர் 2021-ல் 5 நாட்களில் 7 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் காஷ்மீர் பண்டிட், ஒருவர் சீக்கியர், இருவர் புலம்பெயர்ந்த இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.