Published : 16 Aug 2022 05:00 AM
Last Updated : 16 Aug 2022 05:00 AM

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் - 5 உறுதிமொழிகளை மேற்கொள்ள இளைஞர்களுக்கு அழைப்பு

டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். படம்: பிடிஐ

புதுடெல்லி: சுதந்திர தின அமுதப் பெருவிழா, தலைநகர் டெல்லியில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க, 5 உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து நேற்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்தது. 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா, நாடு முழுவதும் ஓராண்டுக்கு கொண்டாடப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி, கடந்த ஓராண்டாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.

இந்நிலையில், 75-வது சுதந்திர தின நிறைவு விழா, நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை மரியாதை செலுத்தினார். பின்னர், செங்கோட்டைக்கு சென்ற அவர், அங்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவில், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள், அரசு உயரதிகாரிகள் உட்பட சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி கூறியதாவது:

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தேசியக் கொடியை பறக்கவிட்டிருப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

நாட்டுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த மகாத்மா காந்தி, நேரு, சர்தார் வல்லபபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், வீர சாவர்க்கர் உள்ளிட்ட எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாட்டு மக்கள் கடன்பட்டுள்ளனர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ராணி லட்சுமிபாய், ஜல்காரி பாய், துர்கா பாபி, வேலு நாச்சியார் உள்ளிட்ட துணிச்சல் மிக்க பெண்களுக்கு இந்த நாடு நன்றி செலுத்துகிறது.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா சிதறுண்டு போகும் என்றும் உள்நாட்டுப் போர் நடக்கும் என்றும் உலக நாடுகள் கருதின. ஆனால், இங்கு ஏராளமான வளமும் வலிமையான கலாச்சாரமும் உள்ளது என்பதை உலக நாடுகள் எண்ணிப் பார்க்கவில்லை. இன்று ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது. பன்முகத்தன்மைதான் நம்முடைய மிகப்பெரிய பலம்.

கடந்த 2014-ம் ஆண்டு நாட்டை வழிநடத்தும் பொறுப்பை மக்கள் என்னிடம் வழங்கினர். விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு அதிகாரமும் அவர்கள் வாழ்வில் முன்னேற்றமும் கிடைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க உறுதி பூண்டுள்ளேன்.

வரும் 2047-ம் ஆண்டு 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அதற்குள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவை நனவாக்குவதற்காக நாம் 5 உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க,இளைஞர்கள் தங்கள் அடுத்த 25 ஆண்டு கால வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும்.

முதலாவதாக, இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, அடிமைத்தன மனப்பான்மைக்கு முடிவு கட்ட வேண்டும். 3-வதாக இந்திய பாரம்பரியத்தை எண்ணி பெருமிதம் கொள்ள வேண்டும். நான்காவதாக, அனைவரும் ஒற்றுமையின் வலிமையை உணர்ந்து செயல்பட வேண்டும். 5-வதாக பிரதமர், மாநில முதல்வர்கள் உட்பட குடிமக்கள் அனைவரும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

உலக நாடுகள் இந்தியாவை பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் பார்க்கின்றன. பிரச்சினைக்கு தீர்வு காண்பவர்களாக நம்மை அவர்கள் பார்க்கின்றனர். இங்கு நிலையான அரசு அமைந்ததால் விரைவாக கொள்கை முடிவுகளை எடுக்க முடிகிறது. இதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தினோம். இதன்மூலம் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுத்து நிறுத்தி உள்ளோம். கரோனா பெருந்தொற்றால் உலக நாடுகள் செய்வதறியாமல் திகைத்து நின்றன. அப்போது, உள் நாட்டிலேயே தடுப்பூசியை தயாரித்து, இதுவரை 200 கோடி டோஸுக்கு மேல் நாட்டு மக்களுக்கு இலவசமாக செலுத்தி சாதனை படைத்துள்ளோம்.

மகரிஷி ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது. உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவரை நினைவுகூர்வோம். அவருடைய விருப்பப்படி சுயசார்பு இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதை வெற்றி பெறச் செய்ய வேண்டியது ஒவ்வொரு குடிமகனின், ஒவ்வொரு அரசின், ஒவ்வொரு சமுதாயத்தின் கடமை ஆகும். இதை அரசின் திட்டமாக பார்க்கக் கூடாது, மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

வாரிசுஅரசியல், ஊழல் ஆகிய 2 தீய சக்திகள் நாட்டின் வளர்ச்சியை தடுத்து வருகின்றன. இவற்றை வேரோடு ஒழிக்க வேண்டும். நாட்டின் செல்வத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

மூவர்ண தலைப்பாகை

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது, வெவ்வேறு பாரம்பரிய உடை அணிந்து வருவது பிரதமர் மோடியின் வழக்கம். அந்த வகையில் இந்த முறை, வெள்ளை நிற குர்த்தா, பைஜாமாவும் நீல நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். அத்துடன் தேசியக் கொடியின் மூவர்ண கோடுகளுடன் கூடிய வெள்ளை தலைப்பாகையை அணிந்து வந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x