

இந்தியாவின் கிஷன்கங்கா நீர்மின்சார திட்டம் தொடர்பாக பாகிஸ்தான் தரப்பு ஆட்சேபங்களை கேட்பதற்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என உலக வங்கியிடம் அந்நாடு கோரியுள்ளது.
கிஷன்கங்கா நீர்மின் திட்டம் தொடர்பாக இந்தியாவும் பாகிஸ் தானும் தத்தமது கருத்துகளை, வாஷிங்டன் நகரில் உள்ள உலக வங்கியிடம் கடந்த 27-ம் தேதி முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், “இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு கிஷன்கங்கா நீர்மின் திட்ட வடிவமைப்பு இல்லை. எனவே இதுபற்றி ஆராய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்” என பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஆனால் இதற்கு மாறாக, “சிந்து நதிநீர் ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டே நீர்மின் திட்டம் வடி வமைக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பம் தொடர்பான ஆட்சேபத்தை பாகிஸ்தான் எழுப்புவதால், உடன் பாட்டில் கூறியுள்ளபடி தொழில் நுட்ப நிபுணரை நியமித்தால் போது மானது. சட்ட நிபுணரை விட பொறி யாளர் போன்ற தொழில்நுட்ப நிபுணரே இப்பிரச்சினையை புரிந்து கொள்ள முடியும்” என்று உலக வங்கியிடம் இந்தியா கூறியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஜீலம் நதிப் படுகையில் 360 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் கிஷன்கங்கா நீர்மின்சார திட்டத்தை கடந்த 2007-ம் ஆண்டு இந்தியா தொடங்கியது.
ஆனால் இத்திட்டத்தால் கிஷன்கங்கா நதியின் போக்கு மாறிவிடும் என்றும் இந்த நதியின் கீழ்ப்பகுதியில் பாகிஸ்தான் அமைத்துள்ள நீலம்-ஜீலம் நீர்மின் திட்டம் பாதிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் கருதுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் தனது ஆட்சேபங்களை இதற்கு முன் கடந்த 2010-ம் ஆண்டு சர்வ தேச மத்தியஸ்த நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றது. இதில் இப் பிரச்சினை கடந்த 2013-ல் இந்தியா வுக்கு சாதகமாக தீர்த்து வைக்கப் பட்டது. எனினும் அண்மையில் உரி ராணுவ முகாம் மீதான தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள நதிகளில், சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி அதிக பட்ச நீரை இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த விவ காரத்தைப் பாகிஸ்தான் மீண்டும் எழுப்பியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஏற்பட உலக வங்கி மத்தியஸ்தராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.