

சிபிஐ இயக்குநர் பதவிக்கு, தமிழகத்தின் ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் பெயரும் பேசப்படுவதாக தெரிய வந்துள்ளது. தற்போதய இயக்குநர் அனில்குமார் சின்ஹா வரும் டிசம்பரில் ஓய்வு பெறுவதால் அப்பதவிக்கு பல்வேறு மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்தியப் புலனாய்வு அமைப்புகளில் சிபிஐ முக்கிய இடம் வகிக்கிறது. நாட்டின் பல்வேறு முக்கிய வழக்குகள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. இதனால் அதன் தலைமை பொறுப்பான இயக்குநர் பதவிக்கு ஒவ்வொரு முறையும் பலர் முயற்சிப்பது வழக்கம்.
இந்த வகையில், வரும் டிசம்பருக்கு பிறகு அடுத்த இயக்குநர் பதவியை பெற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் முயன்று வருகின்றனர். இதில் சிபிஐயின் தற்போதைய சிறப்பு இயக்குநராக பதவி வகிக்கும் ரூபக் குமார் தத்தாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஏனெனில் ஏற்கெனவே சிபிஐயில் பணியாற்றி வரும் இவர்,
தலைமைப் பதவிக்கு உகந்தவராக இருப்பார் எனக் கருதப்படுகிறது. இதுபோல், சிபிஐயில் இணை இயக்குநராக பணியாற்றிய அர்ச்சனா ராமசுந்தரம் பெயரும் புதிய இயக்குநர் பதவிக்கு பேசப்படுகிறது.
கடந்த 1999 முதல் 2006 வரை இணை இயக்குநர் பதவி வகித்த அர்ச்சனா, இப்பதவியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் அதிகாரி என்ற சிறப்பை பெற்றார்.1980-ம் ஆண்டு பேட்ச், தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர் தற்போது ஆயுத எல்லைப் படையின்
(சஷாஸ்திரா சீமா பல் –எஸ்எஸ்பி) தலைமை இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
பெண்களுக்கு வாய்ப்பு
மத்தியப் பாதுகாப்பு படையின் இயக்குநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். எனவே அர்ச்சனாவுக்கு சிபிஐயின் முதல் பெண் இயக்குநராகும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் பின்புலமாக பிரதமர் நரேந்திர
மோடி ஆட்சியில் அதிக பெண்கள், மாநில ஆளுநர்களாக அமர்த்தப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
சிபிஐக்கு வெளியே பல்வேறு பதவிகளில் பணியாற்றுவோரும் இதன் இயக்குநராகப் பணி அமர்த்தப்படுவது உண்டு. இதனால், சிபிஐக்கு வெளியே பணியாற்றும் பலரும் இதன் இயக்குநர் பதவியில் அமர முயற்சிக்கின்றனர்.
இந்தப் பட்டியலில் இந்தோ – திபெத் எல்லைக் காவல் படையின் தலைமை இயக்குநராக இருக்கும் கிருஷ்ணா சவுத்ரியின் பெயர் முதலாவதாகப் பேசப்படுகிறது. 1979-ம் ஆண்டு பேட்ச், பிஹார் அதிகாரியான சவுத்ரி, லாலு பிரசாத் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது.
இத்துடன், பிஹார் முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுசில்குமார் மோடியும் ஏதோ சில காரணங்களால் சவுத்ரியின் பெயரை பிரதமர் நரேந்திர மோடியிடம் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்களை முக்கியப் பதவிகளில் அமர வைப்பதில் பிஹார் அரசியல் தலைவர்கள் கட்சிப் பாகுபாடு இன்றி முன்னணியில் இருப்பதுண்டு.
மகாராஷ்டிரா பிரிவின் 1981-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான மீரன் சி.பார்வோன்கர் பெயரும் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பெண் அதிகாரியான இவர் தற்போது காவல்துறை ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையின் தலைமை இயக்குநராக பதவி வகிக்கிறார்.