

கோவாவில் நறுமண திரவிய நிபுணர் மோனிகா குர்தே கொல்லப்பட்ட வழக்கில் பெங்களூருவில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவாவில் வசித்து வந்த மோனிகா குர்தே (39) கடந்த 7-ம் தேதி கட்டிலில் நிர்வாணமான நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக கிடந்தார். வீட்டில் இருந்த விலையுர்ந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப் பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
கொலைக்கு பின் மோனிகாவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மகாராஷ்டிராவிலும், கர்நாடகாவின் பெங்களூருவிலும் மர்ம நபர் பணம் எடுத்த தகவல் தெரியவந்தது. கர்நாடகா மாநில போலீஸார் உதவியுடன் நேற்று முன் தினம் இரவு அந்த நபரை கோவா போலீஸார் கைது செய்தனர். அவரது பெயர் ராஜ்குமார் சிங் என தெரியவந்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட மோனிகா 2009 முதல் 2011 வரை சென்னையில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.