Last Updated : 24 Oct, 2016 02:51 PM

 

Published : 24 Oct 2016 02:51 PM
Last Updated : 24 Oct 2016 02:51 PM

திரிபுராவில் 3 கைதிகள் தப்பியோட்டம்: அதிகாரிகள் மூவர் சஸ்பெண்ட்

திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலாவில் உள்ள மத்திய சிறையிலிருந்து ஆயுள் கைதிகள் மூன்று பேர் தப்பியோடிய விவகாரத்தில், சிறைக் கண்காணிப்பாளர் உட்பட மூன்று அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய சிறைத்துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ''கடமை தவறிய குற்றத்துக்காக சிறைக் கண்காணிப்பாளர் சந்தோஷ் பகதூர் உட்பட மூன்று அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்வர்ண குமார் திரிபுரா (22), மிலன் தேபர்மா (28), ரபீந்திர திரிபுரா (24) ஆகிய மூன்று ஆயுள் கைதிகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அகர்தலாவில் உள்ள மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய விவகாரத்தால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறையில் வழக்கம்போல் மாலை கைதிகளை கணக்கெடுக்கும்போது 3 பேர் மட்டும் காணாமல் போனது தெரியவந்தது. அவர்கள் மூவருமே வெவ்வேறு கொலை சம்பவங்களுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். சிறையில் இருந்து தப்பி ஓடிய அவர்களைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தேடுதல் பணியில் துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அகர்தலாவில் இருந்து புறப்படும், நின்று செல்லும் அனைத்து ரயில்களிலும் கடுமையான சோதனை மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.

செபாஹிஜாலா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தாஸ் இதுபற்றிக் கூறும்போது, நகரின் வெவ்வேறு இடங்களில் தீவிர தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள 74 காவல் நிலையங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் வங்கதேசத்துக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், எல்லைப்பகுதிகளில் பிஎஸ்எப் வீரர்களையும் கண்காணிக்கச் சொல்லியிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x