

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியா எதிர்கொண்டுள்ள இரு பெரும் சவால்கள் என பேசினார். அது தொடர்பாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியிடம் கருத்து கேட்கப்பட்டது.
நாட்டின் 76-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் பகுதியாக பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்றினார். அதில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என பட்டியலிட்ட அவர், வாரிசு அரசியலை அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி தெரிவித்த வாரிசு அரசியல் தொடர்பான கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதில், “இது தொடர்பாக நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அனைவருக்கும் சுதந்திர தின விழா வாழ்த்துகள்” என்று மட்டும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பவன் கெரா இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்திருந்தார். “பிரதமர் மோடி தனது கட்சியில் உள்ள வாரிசு அரசியல் குறித்து பேசி இருக்கக்கூடும். கடந்த எட்டு ஆண்டுகளாக அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளார்” என தெரிவித்துள்ளார்.