Published : 15 Aug 2022 04:30 AM
Last Updated : 15 Aug 2022 04:30 AM

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி: புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு

புதுடெல்லி: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். இது அவரது 9-வது சுதந்திர தின உரையாகும். இந்த சுதந்திர தின உரையில் முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களிடையே உரையாற்றுவது வழக்கம். கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றிவைத்து, உரையாற்றி வருகிறார். தொடர்ந்து 9-வது முறையாக அவர் இன்று சுதந்திர தின உரையாற்றுகிறார்.

மேலும், சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு சுதந்திர தின உரையில், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், 1,000 நாட்களுக்குள் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் இணைப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் தேசிய ஹைட்ரஜன் திட்டம், கதி சக்தி பெருந்திட்டம், 75 வாரங்களில் 75 வந்தே பாரத் ரயில்கள் போன்ற திட்டங்களை அறிவித்தார்.

அதேபோல, இன்றும் சுதந்திர தின உரையில் முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் ‘வீட்டுக்கு வீடு தேசியக் கொடி’ திட்டம் உட்பட பல நிகழ்ச்சிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விழா அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்த மத்திய அரசு, விழாவை சிறப்பாகக் கொண்டாடுமாறு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டது. இதனால் நாடு முழுவதும் சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2-ம் தேதி முதல் பல்வேறு தரப்பினரும் சமூக ஊடக முகப்பில் தேசியக் கொடியை பதிவேற்றம் செய்துள்ளனர். மேலும், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பாஜக தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் நேற்று முன்தினம் தேசியக் கொடியை ஏற்றினர்.

10,000 போலீஸார் பாதுகாப்பு

டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் உட்பட சுமார்7 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை முழுவதும் டெல்லி போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், செங்கோட்டையைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு வான் பகுதியில் பட்டம், ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறப் பகுதிகளைக் கண்காணிக்க நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விழாவில் பங்கேற்க வருவோர் உணவு, தண்ணீர் பாட்டில், ரிமோட் கன்ட்ரோல் கார் சாவி, சிகரெட்லைட்டர், சிறிய பெட்டி, கைப்பை,கேமரா, பைனா குலர், குடை உள்ளிட்டவற்றைக் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லிமாநகரம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்,வாகன சோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர். மேலும், சுதந்திரதினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x