

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினரை சந்தித்து மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் ஆறுதல் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணையை விரைவாக நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். குடும்பத்தினர் முன்வைக்கும் கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவிப்பதாக உறுதியளித்த அவர், இச்சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத் தில் பேசப்போவதாகவும் கூறினார்.
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசியதாவது: “பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்பட அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை. கிராம மக்களை சந்தித்தால் அவர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாது என்ற அச்சத்தால் அவர்கள் வரவில்லையா? அல்லது குற்றவாளிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் செயல்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வீடுகளில் கழிவறைகள் இல்லாததால்தான் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள வீடுகளில் இவ்வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த கிராமத்தில் நிரந்தரமாக போலீஸ் முகாமை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கிராமத்தினரை முதல்வர் சந்திக்க வேண்டும். விரைவாக விசாரணை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். சிபிஐ விசாரணையை உடனடி யாக தொடங்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசவுள்ளேன்.
கடந்த ஏப்ரல் மாதம் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் பேசுகையில், சில சமயங்களில் சிறுவர்கள் தவறு செய்து விடுகிறார்கள் எனக் கூறியிருந்தார். அவரது கருத்தின் விளைவாகத்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன” என்றார்.