

ஏழைகளை வாக்கு வங்கிக்காக மட்டும் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்வதாக குற்றம்சாட்டிய பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, தமக்கு 60 மாதங்கள் ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கினால், மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதாக உறுதியளித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பேசும்போது, அம்மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியைக் கடுமையாக சாடினார்.
"உத்தரப் பிரதேசத்தை குஜராத் போல் மாறுவதர்கு முதல்வரால் முடியாது என சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறியுள்ளார். குஜராத்தைப் போல மாற்றுவது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா முலாயம்?
ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கு உங்களால் முடியாது. அத்தகைய நிலையை எட்ட, தெளிவான முடிவெடுக்கும் திறன் வேண்டும்" என்றார் மோடி.
கடந்த 60 ஆண்டு காலமாக வறுமையை ஒழிப்பதில் காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்ற அவர், ஏழைகளுக்கு எதிரான மனப்பாங்கை உடைய காங்கிரஸ், மக்களை ஏழைகளாகவே வைத்திருப்பதன் மூலம் வாக்கு வங்கியைத் தக்கவைத்திருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
மேலும், மக்கள் தனக்கு 60 மாதங்களைக் கொடுத்தால், அவர்களின் வாழ்வை மகிழ்ச்சியானதாகவும், அமைதியானதாகவும் ஆக்குவதை உறுதியாகக் கூறுவதாக மோடி தெரிவித்தார்.
மோடி தனது பேச்சில், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடியை மட்டுமின்றி, பகுஜன் சமாஜ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.