

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் வெட்டப்படும் செம்மரங்கள் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவதாக சித்தூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சித்தூர் மாவட்டத்தின் வரதய்ய பாளையம், கல்லூரு ஆகிய பகுதியில் அதிரடிப்படை போலீஸார் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வேகமாக வந்த 6 வாகனங்களைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், செம்மரங்கள் மறைத்து எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த வாகனங்களையும் அதில் இருந்த 72 செம்மரங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்தனர்.