151 பேருக்கு சிறப்பு புலனாய்விற்கான மத்திய அரசின் விருது: தமிழகத்தின் 4 பெண் அதிகாரிகள் உட்பட ஐவர் தேர்வு

கார்த்திக் ஐபிஎஸ்
கார்த்திக் ஐபிஎஸ்
Updated on
1 min read

புதுடெல்லி: சிறப்பு புலனாய்விற்கான ’மத்திய உள்துறை அமைச்சக விருது 2022’ சற்றுமுன் 151 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் தமிழகக் காவல் துறையில் இடம்பெற்ற நான்கு பெண் அதிகாரிகள் உட்பட ஐவர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 2018 முதல் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு புலனாய்வு வழக்குகளுக்கான விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டான 2022-க்கான விருதுகள் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் நாடு முழுவதிலும் உள்ள காவல் துறைகள், சிபிஐ, என்ஐஏ மற்றும் என்சிபி ஆகிய பிரிவுகளின் 151 பேருக்கு வழங்கப்படவுள்ளது. இவற்றில் தமிழகத்திற்கு ஐந்து அதிகாரிகள் விருதாளர்களாகி உள்ளனர்.

இவர்களில் மிகவும் பாராட்டுக்குரியதான வகையில் நான்கு பெண் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் கூடுதல் எஸ்பியான கனகேஷ்வரி, ஆய்வாளர்களான கே.அமுதா, எஸ்.சசிகலா, பாண்டி முத்துலட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இவர்களுடன் உதவி ஆய்வாளர் ஆர்.செல்வராசன் என்பவரும் இடம்பெற்றுள்ளார். நாடு முழுவதும் விருது பெரும் 151 அதிகாரிகளில் 28 பெண் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால், எந்த மாநிலங்களிலும் தமிழகத்தை போல் அதிக எண்ணிக்கையில் 4 பெண் விருதாளர்கள் இல்லை. இது தமிழகத்துக்கு தனிச் சிறப்பைத் தந்துள்ளது. யூனியன் பிரதேசமானப் புதுச்சேரி மாநிலக் காவல் துறையில் ஆர்.ராஜன் உதவி ஆய்வாளர் விருது பெறவுள்ளார். 151 பேரில் மிக அதிக எண்ணிக்கையில் 11 அதிகாரிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்வாகி உள்ளனர். இதன் அடுத்த எண்ணிக்கையில் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசக் காவல் துறைகளில் தலா 10 அதிகாரிகள் விருதாளர்களாகி உள்ளனர். கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலங்களில் தலா 8 அதிகாரிகளும் உள்ளனர்.

கே.கார்த்திக் ஐபிஎஸ்: கேரளாவின் எட்டு அதிகாரிகளில் மாவட்ட எஸ்.பியான கே.கார்த்திக் இடம்பெற்றுள்ளார். இவர் எர்ணாகுளம் மாவட்டப் பணியில் கடந்த வருடம் இருந்தபோது முடித்த கொலை வழக்கிற்காக விருது பெறுகிறார்.

தற்போது இவர் கோட்டயம் மாவட்டத்தின் எஸ்பியாக உள்ளார். 2011-ஆம் ஆண்டில் ஐபிஎஸ் பெற்று கேரளா மாநிலப் பிரிவில் பணியமர்த்தப்பட்ட கார்த்திக், திருவண்ணாமலையின் துறிஞ்சாபுரம் கிராமத்தின் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in