பெங்களூருவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையை கண்டித்து இந்துத்துவா அமைப்பினர் கண்டன பேரணி: தமிழர் பகுதிகளில் பதற்றம்; துணை ராணுவம் குவிப்பு

பெங்களூருவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையை கண்டித்து இந்துத்துவா அமைப்பினர் கண்டன பேரணி: தமிழர் பகுதிகளில் பதற்றம்; துணை ராணுவம் குவிப்பு
Updated on
1 min read

பெங்களூருவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையை கண்டித்து இந்துத்துவா அமைப்பினர் பேரணி நடத்தியதால் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு சிவாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ருத்ரேஷ் (35). ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த இவர், ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலும் செய்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்சூர் நாராயணசாமி முதலியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பங்கேற்ற பின், காமராஜர் சாலையில் நின்று நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள், ருத்ரேஷை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

தகவல் அறிந்து பெங்களூரு கிழக்கு கூடுதல் காவல் ஆணையர் ஹரிசேகரன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கமர்சியல் தெரு போலீஸார், 5 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் தகவல் பரவி பாஜகவினர் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அசம்பாவிதங்களை தடுக்க சிவாஜி நகர், காமராஜர் சாலை, அல்சூர், பிரேசர் டவுன், சிவன் செட்டியார் தோட்டம், காக்ஸ் டவுன் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். துணை ராணுவ படை, கர்நாடக‌ நகர அயுத படை, ஊர்க்காவல் படை உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

த‌மிழர்கள் அதிகமாக வாழும் இந்த பகுதிகளில் பெரும்பாலான கடைகளும், வணிக வளாகங்களும் அடைக்கப்பட்டன. பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இந்நிலையில் பாஜக, ஆர்எஸ்எஸ், சிவசேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் சார்பாக நேற்று சிவாஜி நகரில் கண்டன பேரணி நடத்தப்பட்டது. இதில் முன்னாள் துணை முதல்வர் அசோக், முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, பாஜக எம்பிக்கள் பி.சி.மோகன், பிரதாப் சிம்ஹா உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது கொலையாளி களுக்கு எதிராகவும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் கிழக்கு பெங்களூருவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in