“விலங்குகள் கூட இந்த உணவை சாப்பிடாது” - கண்கலங்கிய உ.பி காவலர் | வைரல் வீடியோ

“விலங்குகள் கூட இந்த உணவை சாப்பிடாது” - கண்கலங்கிய உ.பி காவலர் | வைரல் வீடியோ
Updated on
1 min read

ஃபிரோசாபாத்: தங்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்து கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த காவலர் ஒருவர். அந்த வீடியோ இப்போது வைரலாகி, பலரது கவனத்தை பெற்றுள்ளது.

அந்த வீடியோவில் உணவின் தரம் குறித்து தனது அதிருப்தியை காவலர் மனோஜ் குமார் என தெரிவித்துள்ளார். அவர் தனக்கு வழங்கப்பட்ட உணவை கையில் ஏந்தியபடி சாலையில் பயணித்த மக்களிடம் அதனை காண்பித்துள்ளார். அதோடு சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் அமர்ந்தபடி தர்ணா போராட்டத்திலும் அவர் ஈடுபட்டார்.

“எங்களுக்கு வழங்கப்படும் உணவை விலங்குகள் கூட சாப்பிடாது. காவல் துறையின் மேலதிகாரிகள் இந்த மோசடியை செய்து வருகின்றனர். அவர்களது இந்த செயலால் போலீசாருக்கும், மக்களுக்கும் மோசமான உணவு வழங்கப்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காவல் துறையினருக்கு சத்தான உணவு வழங்கும் பொருட்டு 30 சதவீதம் அலவன்ஸை உயர்த்துவது தொடர்பான உறுதிமொழியையும் மனோஜ் மேற்கோள் காட்டியுள்ளார்.

“நான் விரைவில் பணி நீக்கம் செய்யப்படுவேன் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி சாரிடம் நிறைய முறை தெரிவித்துள்ளேன். ஆனால், அதற்கு தீர்வு கிடைக்கவில்லை” எனவும் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக உணவின் தரம் குறித்து விசாரிக்க உள்ளதாக ஃபிரோசாபாத் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காவலர் மனோஜ் குமாருக்கு எதிராக ஒழுங்கீனம், தொடர்ச்சியாக பணிக்கு வராமல் இருந்தது மற்றும் அலட்சியம் என சுமார் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in