Published : 11 Aug 2022 12:32 PM
Last Updated : 11 Aug 2022 12:32 PM

'ஜோக் அடிக்கிறார்கள்' - பாஜக புகாருக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பதிலடி

குடியரசுத் துணைத் தலைவராக ஆசைப்பட்டதாகவும். அது நிறைவேறாததாலேயே நிதிஷ் குமார் பாஜக கூட்டணியை பிஹாரில் முறித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் சுஷில் குமார் மோடி.

ஆனால் பதவி ஆசை இல்லாத தன்னை பாஜக பகடி செய்வதாக பதிலடி கொடுத்துள்ளார் நிதிஷ் குமார்.

சுஷில் குமார் மோடியின் விமர்சனம் குறித்து நிதிஷ் குமாரிடம் இன்று காலை நிருபர்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "குடியரசுத் துணைத் தலைவராக வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. பாஜக ஜோக் அடிக்கிறது. ஐக்கிய ஜனதா தள கட்சி குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் என இரண்டிலும் பாஜகவை ஆதரித்தது. இதைக் கூட மறந்துவிட்டு பேசுகிறார் சுஷில் குமார் மோடி" என்று கூறினார்.

ஆனால் சுஷில் குமார் மோடியோ, "நிதிஷ் குமார் மழுப்புகிறார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட நிதிஷ் குமாருக்கு சீட் வாங்கிக் கொடுத்தால் நான் பிஹார் முதல்வராகலாம் என்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்னை நேரில் சந்தித்துப் பேசினார்" என்றார்.

முன்னதாக நேற்று பிஹார் முதல்வராக 8வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் நிதிஷ் குமார். மாநிலத்தின் துணை முதல்வராக லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். நேற்றைய பதவியேற்பு விழாவை பாஜக புறக்கணித்தது.

பதவியேற்புக்குப் பின்னர் பேசிய நிதிஷ் குமார், 'நான் 2020 தேர்தலுக்குப் பின்னர் முதல்வராக வேண்டும் என்று கூட விரும்பவில்லை. கட்சியினர் நிர்பந்தத்தினால் முதல்வர் பதவியேற்றேன்" என்று கூறியிருந்தார். தான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கவும் விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவராக ஆசைப்பட்டதாகவும். அது நிறைவேறாததாலேயே நிதிஷ் குமார் பாஜக கூட்டணியை பிஹாரில் முறித்ததாகவும் பாஜக மாநிலத் தலைவர் சுஷில் குமார் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x