Last Updated : 11 Oct, 2016 04:18 PM

 

Published : 11 Oct 2016 04:18 PM
Last Updated : 11 Oct 2016 04:18 PM

மண்டேலா அறக்கட்டளைக்கு ரூ.93 லட்சம் அளித்தது இந்தியா

தென்னாப்பிரிக்க மக்களின் நல்வாழ்வுப் பணிக்காக நெல்சன் மண்டேலா அறக்கட்டளைக்கு, 93 லட்சம் ரூபாயை இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கியுள்ளது இந்தியா.

இதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்த இந்திய உயர் ஆணையர் ருச்சி கனஷ்யாம், ''பிரதமர் நரேந்திர மோடியின் தென்னாப்பிரிக்கப் பயணமும், அப்போது நெல்சன் மண்டேலா அறக்கட்டளைக்கு அவர் சென்றதும் இதற்கு முக்கியமாக அமைந்தது.

17 வருடங்களாக இயங்கி வரும் மண்டேலா அறக்கட்டளையின் உதவிகளை அடையாளப்படுத்தவும், தென்னாப்பிரிக்க மக்களின் நல்வாழ்வுப் பணிக்காகவும் 93 லட்சம் ரூபாயை இந்தியா வழங்கி இருக்கிறது.

இதற்கு முன்பே இந்திய அரசு, மண்டேலா அறக்கட்டளையின் வளாகக் கட்டிடத்தை அமைக்க உதவியுள்ளது. இதற்கு அறக்கட்டளை, தன் கட்டிடத்தின் முகப்பில் நன்றி செலுத்தியுள்ளது.

2014-ல் தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி இந்தியா திரும்பி 100 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில், மண்டேலா அறக்கட்டளை கண்காட்சியை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த மையத்தில்தான் மண்டேலாவுக்கு வழங்கப்பட்ட காந்தி அமைதி விருதும், இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வைக்கப்பட்டுள்ளன.

மண்டேலா அறக்கட்டளை மேற்கொண்டு வரும் நற்பணிகளுக்காக, குறிப்பாக பள்ளிகள் கட்டுவது, எய்ட்ஸ் நிவாரணப் பணிகள் உள்ளிட்டவைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது'' என்று கூறியுள்ளார்.

மண்டேலா அறக்கட்டளையின் நிர்வாகிகள் சார்பில் பேசிய மூத்த அரசியல்வாதி டோக்கியோ செக்ஸ்வாலே, இந்தியா எப்போதுமே தங்களுக்கு ஆதரவாக இருந்துவருவதாகவும், தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு எதிராக முதலில் தன் ஆதரவைத் தெரிவித்த நாடு இந்தியா என்றும் நினைவுகூர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x