

பொது விநியோகம் திட்டத்தில் வழங்கப்படுவதற்காக இறக்குமதி செய்யப்படும் பருப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றுக்கு சுங்கவரி விதிக்கக்கூடாது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மத்தியில் புதிதாக அமைந்துள்ள பாஜக அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளது. அதை முன்னிட்டு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தை டெல்லியில் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி திங்கள்கிழமை நடத்தினார். இதில் தமிழக நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம், திட்டம் மற்றும் அபிவிருத்தித் முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் வேளையில், இந்த புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. அதில் இருந்து நாட்டை, மத்திய அரசு மீட்க வேண்டும் என்று நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். கடந்த 3-ம் தேதி தமிழகத்தின் தேவைகள் பற்றிய மனுவை, பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா அளித்தார். அதில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் தொடர்புள்ள பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசு தொடர்பான திட்டங்களை மாநிலத்தில் அமல்படுத்தும்போது மாநிலத்தின் நலன் பாதிக்காத வகையில் குறைகளை களைய வேண்டும். உதாரணத்திற்கு தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். இதே போன்ற திட்டத்தை மத்திய அரசும் செயல்படுத்துகிறது. அதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே, இதுபோன்ற ஒத்த திட்டங்களுக்கு மாநிலங்களுக்கு கூடுதல் தொகையை, மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இலவச வீடு கட்டித்தரும் இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பரளவை 210-ல் இருந்து 300 சதுர அடியாக உயர்த்த வேண்டும். தமிழகத்தில் சுமார் 8 பிரிவினருக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதில் 3 பிரிவினருக்கு மட்டும் மத்திய அரசு ரூ.200 முதல் ரூ.500 வரை மானியம் அளித்து வருகிறது. இதனை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, அனைத்து பிரிவினருக்கும் தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நகர்ப்புற மேம்பாட்டுக்கான ஜேஎன்என்யூஆர்எம் திட்டத்தில் அதிக நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டும். நகர்ப்புறங்களில் குடிசை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு வசதி செய்து தருவதற்கான விரிவான திட்டம் வகுக்கப்பட வேண்டும். நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு மானிய அடிப்படையில் வீடுகளை கட்டிக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். மாநிலங்களுக்குள்ளே ஓடும் நதிகளை இணைக்க அதிக தொகை ஒதுக்க வேண்டும். தனியார் மற்றும் அரசு கூட்டு முயற்சியில் உருவாகும் திட்டங்களுக்கு ஒரு பொது நிதியத்தை மத்திய அரசு உருவாக்கி நீண்டகால அடிப்படையில் கடன் வழங்க வேண்டும். தமிழ்நாடு பவர் பைனான்ஸ் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், தமிழக போக்குவரத்து நிதிக்கழகம் போன்ற மாநில அரசின் வங்கிகள் அற்ற நிதி நிறுவனங்களுக்கு கட்டமைப்பு நிதி அந்தஸ்து வழங்க வேண்டும். அவை, தனியார் கட்டமைப்பு நிதி நிறுவனங்கள் போல, அதிக கடன் பெற வழிவகை செய்ய வேண்டும். சென்னையை, மும்பையைப் போல சர்வதேச நிதி மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் நிதி உதவியுடன் கூடிய ஒரு நிதியத்தை உருவாக்க வேண்டும். மாநில அரசால் இறக்குமதி செய்யப்படும் பருப்பு மற்றும் எண்ணெய்க்கு சுங்கவரி விதிக்கப்படக்கூடாது. ஒவ்வொரு மாநிலத்திலும் சரிவிகித வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் பின் தங்கிய பகுதிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
மரபுசாரா எரிசக்திதான் நாட்டின் எதிர்காலமாக இருக்கப் போகிறது. அதனால் காற்றாலை மின்சாரம் போன்றவற்றுக்கு சலுகைகள் அதிகப்படுத்த வேண்டும். சூரிய மின்சக்தி திட்டங்களுக்கும் வரும் பட்ஜெட்டில் அதிக தொகை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மரபுசாரா எரிசக்தி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை மின்தொகுப்புக்கு கொண்டு செல்வதற்கான வசதியை ஏற்படுத்த அதிக நிதியை ஒதுக்க வேண்டும். மத்திய சேவை வரி திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கோரிக் கைகளை முன்வைத்தார்.