“நன்றி அண்ணா... இன்று முதல் அவர்களுக்கு பின்னடைவு தொடக்கம்” - ஸ்டாலின் வாழ்த்துக்கு தேஜஸ்வி பதில்

“நன்றி அண்ணா... இன்று முதல் அவர்களுக்கு பின்னடைவு தொடக்கம்” - ஸ்டாலின் வாழ்த்துக்கு தேஜஸ்வி பதில்
Updated on
1 min read

பிஹார்: துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தேஜஸ்வி யாதவ்.

பிஹார் மாநிலத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியுள்ளார். அதன்படி, நேற்று மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பிஹார் முதல்வராக அவர் பதவியேற்பது இது 8-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் குமாரைத் தொடர்ந்து மாநிலத்தின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.

இதனிடையே, பிஹாரில் அமைந்துள்ள புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிஹாரின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிதிஷ் குமார், துணை முதலமைச்சகராகப் பொறுப்பேற்றுள்ள சகோதரர் தேஜஸ்விக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். பிஹாரில் பெருங்கூட்டணியின் இம்மீள் வருகை நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையில் காலத்தே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சி" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

ஸ்டாலினின் இந்த வாழ்த்துக்கு தேஜஸ்வி யாதவ் நன்றி தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் பதிவை டேக் செய்து, “நன்றி அண்ணா!... பிரிவினைவாத மற்றும் எதேச்சதிகார அரசை (மத்திய அரசை) எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். இன்று முதல் அவர்களுக்கு பின்னடைவு தொடங்குகிறது. அன்பான நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in