Published : 10 Aug 2022 10:40 PM
Last Updated : 10 Aug 2022 10:40 PM

இலவசங்கள் நமது குழந்தைகளின் உரிமையை பறித்து, நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் - பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: "சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தற்சார்பு அடைவதைத் தடுத்து, நேர்மையான வரி செலுத்துவோருக்கு சுமையை அதிகரிப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும்" என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பானிப்பட்டில் 2ஜி எத்தனால் ஆலையை நாட்டிற்கு அர்பணித்தார் பிதமர் மோடி. அந்த விழாவில் பேசியவர்: அரசியல் சுயநலத்திற்காக குறுக்கு வழிகளை பின்பற்றும் மனப்பான்மை உள்ளவர்களால், எந்தவொரு பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வுகாண முடியாது. குறுக்கு வழியை பின்பற்றுபவர்கள் சில நேரங்களில் கைத்தட்டல் மற்றும் அரசியல் ஆதாரங்களை பெறலாமே தவிர, பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.

நமது அரசு குறுக்கு வழிகளை பின்பற்றுவதற்கு பதிலாக, பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் பணியை மேற்கொண்டுள்ளது. பயிர்க்கழிவுகள் தொடர்பாக பல ஆண்டுகளாக ஏராளமான தகவல்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால், குறுக்கு வழி மனப்பான்மை கொண்டவர்கள் இதனை தீர்க்கவில்லை.

‘பராலி’ எனப்படும் பயிர்க் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உழவர் - உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. பயிர்க் கழிவுகளை கையாளும் நவீன எந்திரங்களுக்கு 80 சதவீத மானியம் வழங்கப்படுவதுடன், தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன ஆலை, பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வழிவகை செய்யும்.

பயிர்க்கழிவுகளை எரித்ததால், அவப்பெயரை சம்பாதித்த விவசாயிகள், தற்போது உயிரி எரிபொருள் உற்பத்தி மற்றும் தேச நிர்மாணத்திற்கு பங்களிப்பை வழங்குகிறோம் என்று பெருமிதம் அடைகின்றனர். மாட்டுச்சாண திட்டம் விவசாயிகளுக்கு மாற்று வழியில் வருவாய் ஈட்டித்தருவதாக உள்ளது.

பெட்ரோலில் எத்தனாலை கலப்பதன் காரணமாக கடந்த 7-8 ஆண்டுகளில், நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருந்த சுமார் ரூ. 50 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. எத்தனால் கலப்பு மூலம் இதே அளவு தொகை விவசாயிகளுக்கு சென்றுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு வரை 40 கோடி லிட்டர் எத்தனால் மட்டுமே நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது, இந்த உற்பத்தி சுமார் 400 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது.

2014 வரை சுமார் 14 கோடி சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி அளவினர், தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் சமையல் அறை புகையில் சிக்கித்தவித்து வந்தனர். இதனால் சகோதரிகளுக்கு ஏற்பட்டு வந்த சுகாதார பாதிப்புகள் குறித்து இதற்கு முன்பு கவனம் செலுத்தப்படவில்லை.

உஜ்வாலா திட்டத்தின்கீழ் மட்டும் ஏழைப் பெண்களுக்கு சுமார் 9 கோடிக்கும் மேற்பட்ட எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாம் நாட்டில் ஏறத்தாழ 100 சதவீதம் சமையல் எரிவாயு இணைப்பை வழங்கியுள்ளோம். 14 கோடி இணைப்புகளிலிருந்து நாட்டில் தற்போது சுமார் 31 கோடி இணைப்புகள் உள்ளன.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 800 என்ற அளவில் மட்டுமே இருந்த சிஎன்ஜி நிலையங்களின் எண்ணிக்கை 4.5 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் வழி எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாம் 75-வது சுதந்திர தினத்தை நிறைவு செய்யும் வேளையில், அடுத்த சில ஆண்டுகளில், நாட்டில் உள்ள 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் வழி எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம்.

அரசியலில் சுயநலம் இருந்தால், இலவச பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதாக யார் வேண்டுமானாலும் அறிவிக்கலாம். அதுபோன்ற நடவடிக்கைகள் நமது குழந்தைகளின் உரிமைகளைப் பறிப்பதோடு, நாடு தற்சார்பு அடைவதையும் தடுக்கும். இதுபோன்ற சுயநல கொள்கைகளால், நேர்மையாக வரி செலுத்துவோரின் சுமையும் அதிகரிக்கும். நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தெளிவான நோக்கம் மற்றும் உறுதிப்பாடு தேவை. இதற்கு கடின உழைப்புடன் சரியான கொள்கை மற்றும் பெருமளவிலான முதலீடுகளும் தேவை.

அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால், எத்தனால் ஆலை, உயிரி எரிவாயு ஆலை மற்றும் சூரியசக்தி மின்உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுவிடும். நாம் அந்த நிலையில் இல்லை என்றாலும், இந்த நாடு இங்கேயே உள்ளது, இந்த நாட்டில் உள்ள குழந்தைகள், இங்கேயே இருப்பார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் இதே மனப்பான்மையுடன்தான் பணியாற்றியுள்ளனர். ஒரு தேசம் என்ற முறையில் அதுபோன்ற மனப்பான்மை வளர்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என நாம் உறுதியேற்க வேண்டும். இது நாட்டின் கூட்டுப் பொறுப்பாகும்.

அமிர்த பெருவிழா கால கட்டத்தில், நாடு முழுவதும் மூவண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இந்தப் புனிதமான சம்பவத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், நமது மன உறுதிகொண்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை இழிவுபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற நபர்களின் மனப்பான்மையை புரிந்துகொள்வது அவசியம். நம் நாட்டில் உள்ள சிலர் இதுபோன்ற எதிர்மறை சுழல் மற்றும் விரக்தியில் சிக்கியுள்ளனர்.

அரசுக்கு எதிராக அவதூறு பரப்பிய பிறகு, அதுபோன்ற நபர்களை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. அதுபோன்ற விரக்தியில் இந்த நபர்கள் கருப்பு தந்திரத்தை நோக்கி செல்கின்றனர். 5 ஆகஸ்ட் அன்று நிகழ்ந்த சம்பவங்கள் இதுபோன்ற கருப்புத் தந்திர மனப்பான்மையை பரப்பும் நிகழ்ச்சியே. கருப்பு உடைகள் அணிவதன் மூலம் அவர்களது விரக்தியான காலகட்டம் முடிவுக்கு வரும் என அவர்கள் நினைத்தால், கருப்பு தந்திரம் மற்றும் அவர்களது மூடநம்பிக்கை பற்றி அறியாதவர்கள் என்பதோடு, அவர்கள் மீது மக்களுக்கு இனி நம்பிக்கை ஏற்படாது என்பதையும் அறியாதவர்கள் ஆவர். இவ்வாறு பிரதமர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x